இந்த உலகில் மனிதர்களால் முடியாத எந்த விஷயங்களுமே இல்லை என சொல்லலாம். நம்மால் முடிந்தவரை ஒரு விஷயத்தை பல முறை முயற்சி செய்து பார்க்க பலமுறை தோல்விகளை சந்தித்தாலும் இறுதியில் அது வெற்றியில் தான் கொண்டு போய் நம்மைச் சேர்க்கும்.
அதிலும் குறிப்பாக இந்த கின்னஸ் சாதனையின் மூலம் நிறைய விஷயங்கள் மக்கள் செய்வது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தகுந்த அங்கீகாரத்தையும் கொடுத்து வருகின்றனர். உதாரணத்திற்கு பல கிலோ மீட்டர் தூரங்கள் வேகமாக நடப்பது, சட்டென நம்மால் செய்ய முடியாத விஷயத்தை பலமுறை பயிற்சி பெற்று மேற்கொள்வது என நிறைய விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில் சமீபத்தில் எகிப்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த விஷயம் பலரையும் ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. எகிப்து நாட்டை சேர்ந்தவர்தான் மேக்டி எய்ஸ்சா. இவருக்கு தற்போது 45 வயதாகும் நிலையில் ஏழு தினங்களில் உலகில் உள்ள ஏழு அதிசயங்களை சுற்றி பார்த்து உலக சாதனை படைத்து பலரது புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளார்.
இவர் உலகின் ஏழு அதிசயங்களை ஏழு தினங்களுக்கும் குறைவான நேரத்தில் சுற்றி பார்த்ததுடன் மட்டுமில்லாமல் அதிவேகமாக இந்த ஏழு இடத்திற்கும் சென்ற சாதனையும் தற்போது படைத்துள்ளார். முதலில் சீனாவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் இந்த பயணத்தை தொடங்கிய மேக்டி எய்ஸ்சா, பின்னர் இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக ஜோர்டான் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான பெட்ராவிற்கும் சென்ற மேக்டி எய்ஸ்சா, அங்கிருந்து ரோமில் உள்ள கொலோசியம் என்ற அதிசயத்திற்கும், இதன் பின்னர் பிரேசிலில் உள்ள கிறிஸ்து தி ரீடீமர் என்ற இடத்திற்கும், கடைசியாக பெருவில் உள்ள மச்சுபிச்சு ஆகிய இடங்களுக்கும் சென்று பார்வையிட்டுள்ளார்.
விமானம், ரெயில், பேருந்து என பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி மேக்டி எய்ஸ்சா இந்த கின்னஸ் சாதனையை செய்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் இந்த பயணத்தை சரியாக 6 நாட்கள் 11 மணி நேரம் 52 நிமிடங்களில் முடித்துள்ளதுடன் கின்னஸ் சாதனை பக்கத்திலும் இவர் பயணித்த வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசும் மேக்டி எய்ஸ்சா, தனது சிறுவயது கனவை நிறைவேற்றி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக இந்த பயணத்திற்கு திட்டத்தை போட்டு தயாராகி இருந்தவர், அதனை விமானம், பேருந்து, ரயில் உள்ளிட்ட உதவியுடன் வெற்றிகரமாக முடித்துள்ளார்.
நடுவே பயணத்தின் அசதியால் ஒருமுறை தூங்கி திட்டம் போட்டு வைத்த பேருந்து ஒன்றையும் தவறவிட்ட மேக்டி, சரியான நேரத்தில் மற்றொரு பேருந்தை பிடித்து அடுத்த இடத்திற்கு சென்றிருந்தார். இதேபோல விமானத்தையும் தவறவிட்டிருந்த அவர், தனது சாதனையை பற்றி விளக்கி கூறியதால் சில நிமிடங்கள் கழித்து அந்த விமானம் புறப்பட்டு இருந்தது.
இப்படி ஒரு முக்கியமான சாதனையை செய்து முடித்துள்ள மேக்டி எய்ஸ்சாவிற்கு தற்போது பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.