ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் ‘டிசி’ கேட்கக்கூடாது: ஐகோர்ட் அதிரடி

By Keerthana

Published:

சென்னை: ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை தருமாறு வற்புறுத்த கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது

கொரோனா பேரிடர் காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் பல தனியார் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கோரும் போது, கட்டண பாக்கி உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இதை எதிர்த்து ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவருக்கு, சான்றிதழ் மறுக்க கூடாது எனவும், சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, வேறு பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் போது மாற்றுச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என உத்தரவிட்டு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தார்கள்.

மாற்று சான்றிதழ் என்பது மாணவர்களின் தனிப்பட்ட ஆவணம் என்பதால் மாற்று சான்றிதழ் வழங்கும்போது ‘கட்டண பாக்கி உள்ளது’ என்றோ ‘கால தாமதமாக கட்டணம் செலுத்தியதாகவோ’ குறிப்பிட்டு மாணவர்களை மனரீதியாக பாதிப்படைய செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

மாற்று சான்றிதழ் என்பது ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாணவர்கள் சேர்வதற்கான ஒரு ஆவணமே தவிர, பெற்றோர்களிடமிருந்து கட்டணம் பாக்கியை வசூலிக்க கூடிய கருவி அல்ல எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கல்வி உரிமைச் சட்டப்படி மாற்றுச் சான்றிதழ் கட்டாயமல்ல என்பதால், இதுசம்பந்தமான விதிகளை மூன்று மாதங்களில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி நிர்பந்திக்க கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.

மேலும், மாற்றுச் சான்றிதழ்களில் கட்டண பாக்கி குறித்து குறிப்பிடக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இதனை மீறும் வகையில் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியது.

மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியது பெற்றோரின் கடமை எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், கட்டண பாக்கியை பெற்றோரிடம் இருந்து வசூலிக்க தனியார் பள்ளிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், கட்டணம் வசூலிக்க மாற்றுச் சான்றிதழை கருவியாக பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்கள் எந்த மனக்குறையும் இல்லாமல் கல்வி கற்க அனுமதிக்க வேண்டிய பள்ளிகள், மாற்றுச் சான்றிதழில் கட்டண பாக்கி உள்ளது எனக் கூறி அவர்களை வகுப்புக்கு வெளியே நிற்கச் செய்வது, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும் என்று நீதிபதிகள் கண்டித்தனர்.