நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பைப் பார்த்து மிரளாதவர்களே கிடையாது. தான் நடித்த படங்களில் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தவர். குறிப்பாக மன்னர்கள் வரலாறு, புராணப் படங்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் வரலாறு ஆகிய படங்களைப் பார்க்கும் போது சிவாஜியின் உருவமே கண்முன் வந்து நிற்கும்.
அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர். இப்படி சிவாஜி கணேசனின் நடிப்பை ரசிகர்கள்தான் பார்த்து மிரண்டது போல ஒரு யானையும் அவரின் நடிப்புக்கு தலை வணங்கியிருக்கிறது. அந்தப் படம் தான் சரஸ்வதி சபதம்.
பழம்பெரும் பக்திப் பட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1966-ல் வெளிவந்த திரைப்படம் தான் சரஸ்வதி சபதம். சிவாஜி கணேசன், ஜெமினி, கே.ஆர். விஜயா, சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளியாக வந்து நடிப்பில் உருக வைத்து பின்னர் சரஸ்வதியின் அருளால் கல்வியில் சிறந்து விளங்கி அரசவைப் புலவர் ஆகும் அளவிற்கு வளர்ந்து விடுவார் சிவாஜி கணேசன். இந்தப் படம் மகத்தான வெற்றி பெற்றது. மேலும் இந்தப் படத்தின் ஒலிச்சித்திரம் கேட்காத கோவில் திருவிழாக்களும் இல்லை. விஷேச வீடுகளும் கிடையாது.
ஒரே வார்த்தை தான் கமல் மற்றும் கிரேஸி மோகனை கிளீன் போல்டு செய்த நாகேஷ்…
ஒவ்வொரு வசனமும் மனதில் நிற்பவை. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் யானை மிதிக்க வருவது போலவும், அப்போது சிவாஜி கணேசன் நில் என்றவுடன் அது பின்வாங்குவது போன்றும் ஒரு காட்சி இருக்கும். இந்தக் காட்சியைப் படமாக்கும் போது முதலில் ஒத்திகை பார்க்கப்பட்டது.
அதில் சிவாஜி கணேசனுக்குப் பதிலாக ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி யானை வேகமாக வந்தவுடன் நில் என்று சொன்னதும் நிற்காமல் அந்தப் பெட்டியை உதைத்துத் தள்ளி விட்டது. அனைவருக்கும் பயம் வந்து விட்டது. இந்தக் காட்சியை டூப்போட்டு எடுக்கலாம் என்று கூறியிருக்கின்றனர்.
ஆனால் அதனை மறுத்த நடிகர் திலகம் வேண்டாம்.. நானே நடிக்கிறேன். அப்போது தான் காட்சி உயிரோட்டமாக இருக்கும் என்று கூறி, சங்கிலியால் கை, கால்களை பிணைத்து விட்டு படுத்திருக்க யானை வேகமாக வந்தது. அப்போது நடிகர் திலகம் தனது கர்ஜித்த குரலுடன் நில் என்று முழங்க யானை ஸ்தம்பித்துப் போய் காலைத் தூக்கி அப்படியே நின்றது. சுற்றியிருந்த அனைவரும் மெய்மறந்து நின்றனர். ஒரு யானையே நடிகர் திலகத்தின் நடிப்பினைப் பார்த்து வியந்தது கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.