ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்று கூறுவார்கள். ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்கள் விழாக் கோலம் கொண்டிருக்கும். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், யாகங்கள் போன்றவைகள் நடைபெறும். ஆடிவெள்ளி, ஆடிச்செவ்வாய், ஆடிப்பூரம் போன்ற நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இது மட்டுமல்லாது அம்மனுக்கு வளைகாப்பு நடத்துதல், பெண்களின் மங்கலம் நீடித்து நிலைக்க மங்கள் சரடு பூஜைகள், அம்மனுக்கு பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல், கூழ் ஊற்றுதல் போன்றவைகள் நடைபெறும். பெண்கள் தாலி பாக்கியம் கிட்டவும், குழந்தை வரம் கிடைக்கவும் ஆடி மாதத்தில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவர்.
அத்தைகைய ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் முன்னோர்கள் காலம் தொட்டு நடைபெறும் மிகவும் சிறப்பான ஒன்றாகும். அது ஏன் குறிப்பாக கூழ் ஊற்றுகிறார்கள், நம் முன்னோர்கள் ஏன் அதைச் செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. நம் முன்னோர்கள் அறிவியல் ரீதீயாகவும் இத்தகைய வழிமுறைகளை கடைப்பிடிப்பதில் வல்லவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நமது முன்னோர்களின் ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கு பின்பும் அறிவியல் உள்ளது . அந்த வகையில் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதற்கும் பின்னணியிலும் அறிவியல் உள்ளது. ஆம். ஆடி மாதம் என்பது காற்றும் மழையுமாக இருக்கும். ஆடி மாதத்தில் தான் மழைக்காலம் தொடங்கும். இந்த பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு என்பதால் தான் ஆடி மாத வழிபாடுகளில் வேப்பிலையும் எலுமிச்சையும் முக்கியத்துவம் பெறுகின்றன.
கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அம்மை நோய் என்பது அதிகமாகக் காணப்படும். தற்போது அம்மை நோய் பாதிப்பு இல்லை என்றாலும் 100 ஆண்டுகளுக்கு முன்பு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக, ஆடி மாதத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலை காரணமாக, இந்த மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் இருமல் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு வலி வகுக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குளிர்ச்சி தேவை என்பதால், இந்த நேரத்தில் கம்பு மற்றும் கேழ்வரகை பயன்படுத்தி கூழ் செய்து அருந்தி வந்தனர்.
எனவே நோய்கள் தீரவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கம்பு, கேழ்வரகு இருப்பு வைத்துள்ளவர்கள் அனைவரும் அம்மனுக்கு கூழ் ஊற்ற வேண்டும் என்று சொல்லி வைத்தனர். இதன் மூலம் ஏழை எளியோர் பசியை ஆற்றவும் இந்த கூழ் உதவியது. இதன் காரணமாகவே வேப்பிலை, மஞ்சள் நீர், வைத்து அம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இதனால், ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.