லாகின் ஐடி, பாஸ்வேர்ட் இல்லாமல், ஓடிபி இல்லாமல், வங்கியின் சர்வரை ஹேக் செய்து 16 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
வங்கியில் பணம் போட்டு வைப்பது பாதுகாப்பானது என்று கூறப்படும் நிலையில் போலியான நபர்கள் வங்கி வாடிக்கையாளர்களிடம் போன் செய்து ஓடிபிகளை பெற்று வங்கி கணக்கிலிருந்து மோசடியாக பணத்தை எடுத்து வருவது குறித்த வழக்குகள் நாடு முழுவதும் ஏராளமாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கு பதிலாக நேரடியாக வங்கியை ஏமாற்றி பணம் மோசடி செய்து விடலாம் என்ற ஒரு நூதன மோசடி உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா என்ற பகுதியில் உள்ள வங்கியின் சர்வர் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த வங்கியில் இருந்து 89 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு 16.5 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் வங்கி மேனேஜரின் லாகின் ஹேக் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் வங்கி இணையதளத்தில் நுழைந்து பல்வேறு நபர்களை வங்கி கணக்குகளில் இருந்து 89 வெவ்வேறு வங்கி கணக்குக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
லாகின் ஐடி, பாஸ்வேர்ட் இல்லாமல் ஓடிபி இல்லாமல் வங்கியின் சர்வரை ஹேக் செய்து கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.