நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தப்படும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர். ஏற்கனவே மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பெட்ரோல் டீசலுக்கு பதிலாக கேஸ் சிலிண்டர் வைத்து ஓட்டும் வகையில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களும் அதிகமாக தற்போது தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் உலகில் முதல் முதலாக கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி இயங்கும் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த பைக்கில் இரண்டு கிலோ கேஸ் நிரப்பினால் 200 கிலோமீட்டர் வரை செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் இது கேஸ் மட்டுமின்றி பெட்ரோலிலும் இயங்கும் என்பதும் இரண்டு லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 கிலோ கேஸ் ஆகியவை இணைந்து பயன்படுத்தினால் 330 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த பைக் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்தால் பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பைக் பயன்படுத்துவதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு குறையும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த பைக்கின் விலை 95 ஆயிரம் ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனா ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் இருந்து வரும் நிலையில் இந்தியா இதில் மூன்றாவது நாடாக இணைந்துள்ளது.