கர்மவீரர் காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார். காமராஜர் தனது 13 ஆம் வயதில் இருந்தே பொது நிகழ்வுகள் மற்றும் அரசியலில் ஆர்வம் காட்டினார். அப்போதிலிருந்தே பஞ்சாயத்து கூட்டங்கள் மற்றும் அரசியல் கூட்டங்களில் கலந்துக் கொண்டார் காமராஜர்.
காமராஜர், தனது 16 வது வயதில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1921 ஆம் ஆண்டு முதன்முறையாக மதுரையில் மகாத்மா காந்தியை சந்தித்தார். மகாத்மா காந்தி அவர்களின் மது ஒழிப்பு, காதி பயன்பாடு, தீண்டாமை ஒழிப்பு, உப்பு சத்தியாகிரகம், சுதந்திர போராட்டம் அனைத்திலும் கலந்துக் கொண்டார் காமராஜர்.
இந்தப் போராட்டங்களில் கலந்துக் கொண்டதால் பலமுறை சிறை சென்றுள்ளார் காமராஜர். முத்துராமலிங்கத் தேவரின் ஆதரவால் தேர்தலில் போட்டியிட்ட காமராஜர் 1936 இல் சென்னை மாகாண காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1937 இல் சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் ‘வெள்ளையனே வெளியேறு’ பிரச்சாரத்தில் கலந்துக் கொண்டு சிறை சென்றார். அடுத்ததாக வெளியே வந்து தனது காங்கிரஸ் கட்சிக்காக அயராது உழைத்தார் காமராஜர். 1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் உரிமையைப் பெற்றது.
1954 ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார் காமராஜர். தனது ஆட்சிக் காலத்தில் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய பள்ளிகளை கட்டினார். இலவச மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார். இலவச சீருடைகளை வழங்கினார். இதனால் இதுவரை ‘கல்வித் தந்தை’ என்று அழைக்கப்பட்டார்.
இது தவிர அணைகள், தொழிற்சாலைகள் என தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினால் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தவர் காமராஜர். தான் இறந்த போதிலும் தனக்கென 2 செட் உடைகள், ஒரு காலணி, 100 ரூபாய் பணம் மட்டுமே கொண்டிருந்தவர் காமராஜர். சுயநலமற்று, மக்களின் நலனுக்காக பல திட்டங்களை உருவாக்கி அயராது பாடுபட்டதால் இவரை ‘பெருந்தலைவர் காமராஜர்’ என்று அழைக்கின்றனர். 1975 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் அன்று உயிர் துறந்தார்.