ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அளக்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் தாசில்தார் ராஜேஸ்வரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தோட்டமூலா பகுதியை சேர்ந்த பட்டதாரியான உம்மு சல்மாடும்பத்தினருக்கு சொந்தமாக 3.27 ஏக்கர் நிலம் இருக்கிறது. உம்மு சல்மாவின் தாயார் கடந்த 2015-ம் ஆண்டு காலமாகிவிட்டார். கடந்த ஆண்டு அவரது தந்தை மற்றும் சகோதரர்களும் இறந்து விட்டார்கள்.
இதனால் சொத்தில் தந்தையின் பங்காக 36 சென்ட் நிலம் உம்மு சல்மாவுக்கு கிடைத்தள்ளது. மேலும் அவரது பெரியப்பா வகையில் 6 சென்ட் நிலம் எழுதி கொடுக்கப்பட்டுள்ளத. அதன்படி கூடலூர் பகுதியில் உம்மு சல்மா, தனக்கு மொத்தம் உள்ள 42 சென்ட் நிலத்தை எல்லை வரையறை செய்வதற்காக கடந்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரியிடம், உம்மு சல்மா விண்ணப்பித்தார். அதற்கு ரூ.820 கட்டணமும் செலுத்தினாராம்.
ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உம்மு சல்மா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் கூடலூர் தாசில்தாரிடம் உடனடியாக நில அளவீடு செய்து எல்லை வரையறை செய்யும்படி உத்தரவிட்டது.
அதன்பின்னர் உம்மு சல்மா நீலகிரி மாவட்டம் கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரியை, நிலத்தை அளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல் கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரி ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டாராம்.
இதனால் அதிருப்தி அடைந்த உம்மு சல்மா, ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் தாசில்தார் ராஜேஸ்வரியை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு உம்மு சல்மாவிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்து கூடலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜேஸ்வரியை சந்திக்குமாறு கூறினார்கள்.
அதன் பின்னர் உம்மு சல்மா லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி தாசில்தார் ராஜேஸ்வரியிடம் இவ்வளவு பணம் தான் என்னிடம் உள்ளது எனக்கூறி கொடுத்துள்ளார். அதை தாசில்தார் ராஜேஸ்வரி வாங்கி கொண்டார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். இந்த சம்பவம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.