ரோஹித்துக்கு கூட கிடைக்காத பாக்கியம்… கில் கேப்டனா ஜெயிச்ச 2 வது மேட்சில் இந்தியா படைத்த சரித்திரம்..

By Ajith V

Published:

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை சொந்தமாக்கிய அதே வேகத்தில் வீரர்களுக்கு இந்தியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட அது தொடர்ந்து நீடித்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி ஒரு சூழலில், இன்னொரு பக்கம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் இந்திய வீரர்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்திருந்தாலும் அதன் பின் 2 போட்டியில் தொடர்ந்து கில் தலைமையில் அசத்தலான வெற்றியை இந்திய வீரர்கள் பெற்றிருந்தனர். பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே அடுத்து இரண்டு போட்டிகளில் பட்டையை கிளப்பி வரும் இந்திய அணி இன்னும் ஒரு போட்டியில் வென்றாலே தொடரை சொந்தம் ஆக்கி விடலாம்.

ஆனால் அதே நேரத்தில் சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி முடிந்த வரை போராடி பார்க்கும் என்பதால் நிச்சயமாக இரண்டு போட்டிகளில் அவர்கள் கடுமையான சவால் கொடுப்பார்கள் என்று தெரிகிறது. இதனால் இந்திய அணி இன்னும் கவனத்துடன் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் ஆடி வெற்றிகளை குவிப்பதற்கான வழிகளில் களமிறங்க வேண்டும் என்பது தான் பாக்கி உள்ளது.

அப்படி ஒரு சூழலில் ரோஹித் சர்மா ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்டு கிடைக்காமல் போன பெருமை ஒன்று தற்போது இளம் இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில்லிற்கு கிடைத்துள்ளது பற்றி பார்க்கலாம். தென் ஆப்பிரிக்க அணியை டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் வீழ்த்திய போது மொத்தமாக டி20 சர்வதேச போட்டிகளில் 148 வெற்றிகளை இந்திய அணி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தற்போது இரண்டு வெற்றிகளை அடுத்தடுத்த போட்டிகளில் வென்ற இந்திய அணி, தங்களின் 150 வது வெற்றியை டி20 சர்வதேச போட்டிகளில் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் மற்ற எந்த சர்வதேச அணிகளுக்கும் கிடைக்காத ஒரு பெருமை தான் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. முதல் முறையாக ஒரு அணி 150 வெற்றிகளை டி20 சர்வதேச போட்டிகளில் பதித்துள்ள நிலையில் இவர்களுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணி 142 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சமீப காலமாக, ரோஹித் அணியை சிறப்பாக வழிநடத்தி வந்தாலும் அவர் ஓய்வினை அறிவித்த பின்னர் இந்திய அணி ஒரு முக்கியமான மைல்கல்லை கில் தலைமையில் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.