பேரு மட்டுமில்ல.. பாலினத்தையும் சேர்த்து மாற்ற விரும்பிய அரசு அதிகாரி.. இந்திய வரலாற்றையே திரும்பி பாக்க வெச்ச உத்தரவு..

By Ajith V

Published:

இன்றைய காலகட்டத்தில் பெண்ணாக பிறக்கும் பலரும் ஆணாக மாற வேண்டும் என்றும் ஆணாகப் பிறக்கும் பலரும் பெண்ணாக மாற வேண்டும் என்று நினைப்பது குறித்து நிறைய செய்திகளை நாம் அடிக்கடி கடந்து வந்திருப்போம். இதற்கு எல்லாம் முன்பு சட்ட ரீதியிலான சிக்கல்கள் இருந்தாலும் தற்போது அவற்றில் இருந்து மெல்ல மெல்ல நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் வருகிறது.

அதே வேளையில், ஒரு சில விஷயங்களுக்கான சட்ட சிக்கல்களும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. சாதாரணமாக இருக்கும் ஒரு நபர் தங்களுக்கு பிடித்தது போல விதிகளுக்கு உட்பட்டு தங்களை மாற்றிக் கொள்ளலாம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அரசு அதிகாரிகள் இதில் எதாவது மாற்றத்தை விரும்பினால் என்ன நடக்கும் என்பது பெரிய கேள்வியாக தான் இருந்து வந்தது.

அப்படி ஒரு சூழலில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இது தொடர்பாக சட்டத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டு சில மாற்றங்களும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தான், அரசு அதிகாரியாக இருக்கும் நபர் ஒருவர் தன் பாலினத்தை மாற்றினால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள மத்திய கலால் வரி மற்றும் சேவை வரி தீர்ப்பாயத்தின் மாநில இணை ஆணையராக நியமிக்கப்பட்டவர் தான் பெண் ஐஆர்எஸ் அதிகாரி அனுசுயா. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து தான் தனது பாலினம் மற்றும் பெயரை மாற்றிக் கொள்வதற்காக கோரிக்கை ஒன்றையும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய வருவாய்த் துறையிடம் மனு ஒன்றையும் அளித்துள்ளார் அனுசுயா.

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பான உத்தரவில் பிறப்பித்துள்ள தகவலின் படி, அனுசுயா என்ற பெண் ஐஆர்எஸ் அதிகாரி தனது பெயரை அனுசுயா என்பதிலிருந்து அனுகதிர் சூர்யா என மாற்றிக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அவர் தனது பாலினத்தையும் பெண்ணிலிருந்து ஆணாக மாற்றிக் கொள்ள அவர்கள் உத்தரவும் அனுமதியும் அளித்துள்ள நிலையில் அவரது பெயர் அனைத்து படிவங்களிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் இந்த சம்பவத்தில் மற்றொரு சிறப்பம்சமாக அவர் இனிமேல் அதிகாரப்பூர்வமாக ஆண் சிவில் அதிகாரி என்றும் அறியப்படுவதாக அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.