நாம் தற்போதைய நிகழ் காலத்தில் வாழ்ந்து கொண்டே இருந்தாலும் இதற்கு முந்தைய காலமும் வருங்காலமும் பற்றி அரிதான தகவல்களை மட்டுமே நம்மால் அறிந்து கொள்ள முடியும். அதிலும் நமது பிறப்புக்கு பின் சில ஆண்டுகள் குறித்து நிறைய செய்திகளை தெரிந்து கொண்டாலும் வரலாற்றைப் பற்றி பல அரிதான தகவல்கள் நமக்கு எட்டாக்கனியாகவே இருக்கும்.
வரலாறு குறித்து நிறைய தகவல்கள் நம்மைச் சுற்றி வலம் வந்தாலும் அதில் எது உண்மை, எது பொய் என்பதை நம்மால் ஆராய்ந்து பார்க்க முடியாத அளவுக்கு தான் ஆதாரங்களும் இருக்கும். ஆனால் அதே வேளையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொல் பொருள் ஆராய்ச்சி உள்ளிட்ட விஷயங்கள் நிச்சயம் நமக்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த வரலாற்றை எடுத்துரைக்கவும் செய்யும்.
அது மட்டுமில்லாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள், கலைத்திறன் உள்ளிட்ட பல வியப்பான விஷயங்களையும் இந்த ஆராய்ச்சியின் இறுதியில் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது இந்தோனேஷியா பகுதியில் கண்டறியப்பட்ட 51 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் பலரையும் ஒரு நிமிடம் மிரள வைத்துள்ளது.
இந்தோனேசிய நாட்டின் தெற்கு சுலவேசி என்னும் பகுதியில் அமைந்துள்ளது மரோஸ் பங்கெப் என்னும் பகுதி. இங்கே ஒரு சுண்ணாம்பு குகை அமைந்துள்ளது. அந்த பகுதியில் தான் சுமார் 51,200 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பகுதியில் உள்ள குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரை, சுமார் 47,000 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், தற்போது அதை விட பழமையான ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளதால் இந்தோனேசியாவில் உள்ள இந்த பகுதி உலகின் மிக பழமையான குகை ஓவியங்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இத்தனை ஆண்டுகளுக்கு முன்பகாவே மனிதர்களின் கலைத்திறன் மிக புதுமை பெற்று விளங்கியதாகவும் இதன் மூலம் தெரிய வரும் நிலையில், கலை மீது அவர்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்ததும் இதன் மூலம் புலப்படுகிறது.
அதே போல, இந்த ஓவியத்தில் ஒரு பன்றியை சுற்றி மூன்று மனித உருவங்கள் நிற்பது போன்றும் இடம்பெற்றுள்ளது. இப்படி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை நிறைந்த ஓவியத்திற்கு பின்னால் கலை நயம் அதிகம் இருப்பதே மக்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களை விட இந்த குகை ஓவியங்களில் யதார்த்தம் அதிகம் நிறைந்திருந்ததும் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.