கோவை : அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது என பொதுச்செயலளார் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பல வகையில் சிதறியது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி, பழனிச்சாமி அணி என பிரிந்திருந்த போது நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமும், அதிமுகவின் பொதுக்குழுவின் முடிவின்படியும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது அந்தப் பதவியில் உள்ளார்.
எடப்பாடி பழச்சாமிக்கும், ஓபிஎஸ்-க்கும் இடையேயான அதிகார யுத்தத்தில் ஓபிஎஸ் வெளியேறி அதிமுக தொண்டர் மீட்புக் குழுவை ஆரம்பித்து அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். மேலும் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவுடன் பலாப்பழ சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து வருகிறார்.
மேலும் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோரும் அதிமுகவை இணைந்து செயல்பட அவ்வப்போது சில கருத்துக்களையும், அதிமுகவினை இபிஎஸ்-யிடமிருந்து மீட்போம் என்றும் ழுழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் இணைப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஓபிஎஸ் போவதும், வருவதுமாக இருப்பதற்கு இது கடையில் விற்கும் பொருள் அல்ல. அதிமுகவிற்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைப்படிதான் கட்சி நடத்துவோம்.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரைப்படங்களில் விஜயகாந்த்.. பிரேமலதாவின் அதிரடி அறிவிப்பு..!
கட்சிக்கு விரோதமாக அவர் ஈடுபட்ட காரணத்தினால்தான் அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இது நானோ அல்லது தனிப்பட்ட கட்சி நிர்வாகி எடுக்கும் முடிவு அல்ல. பொதுக் குழு கூட்டி அனைத்து தொண்டர்களின் எண்ணப்படி, பொதுக்குழு உறுப்பினர்களும் இணைந்து எடுத்த தீர்மானத்தின் படிதான் அவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். அவரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் கிடையாது“ என்று கூறினார்.