சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத ஒரு தகவல் செய்தியாக உலா வருகிறது. அதனை பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் அரசு வேலையில் சேர வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் கனவாக உள்ளது. ஆனால் வெறும் 1000 முதல் 6000 வரையில் தான் பணியிடங்கள் ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்படுகின்றன. அதிகபட்சமாக குரூப் 4 பணிகளுக்குத்தான் அதிகப்படியான ஆட்கள் அரசால் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால் அந்த பணியில் சேர்வது என்பது அவ்வளவு எளிதல்ல.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி 6,244 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் வரை எழுதி இருக்கிறார்கள்.
இந்த குரூப் 4 தேர்வினை பொறுத்தவரை நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை.. எழுத்து தேர்வு முடிந்த உடன் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இவை சரியாக இருந்தால், அவர்களுக்கு பணி கிடைத்துவிடும். பொதுவாக குரூப் 4 தேர்வுகள் கடினமாக இருக்காது. அதனால் கட் ஆப் மதிப்பெண்களும் குறையவும் வாய்ப்பு இருக்காது.ஆனால் இந்த முறை அப்படி இல்லை. குரூப் 4 தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த முறை குரூப் 4 தேர்வில் சில கேள்விகள், குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு நிகராக இருந்ததாக கூறப்படுகிறது. சில கேள்விகள் அவ்வளவு எளிதாக புரிந்து கொண்டு பதில் அளிக்கும் வகையில் இல்லை என்றும், நுட்பமாக யோசித்து, தெளிவாக முடிவெடுத்தால் மட்டுமே பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த முறை கட் ஆப் மதிப்பெண்கள் சரியக்கூடும் என்கிறார்கள். சுமார் 170க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்கிறார்கள். பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 146-151 ஆக இருக்கும் என்றும், பொதுப் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 152 – 155ஆக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
அதேபோல இதர பிற்படுத்தப் பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்காக இருக்கும் என்று தேர்வர்கள் எதிர்பாரக்கிறார்கள்.
அதேநேரம் இன்னொரு முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 20 லட்சம் பேர் வரை தேர்வுகளை எழுதி உள்ளதால் தேர்வு முடிவுகள் கடந்த முறை போலவே இந்த முறையும் தாமதம் ஆகும் என்கிறார்கள்.தேர்வு தாள்கள் திருத்தம் இந்த மாதம் தொடங்குகிறது. ஆனால் திருத்தம் முடிய 6 மாதம் ஆகும் என்கிறார்கள்.
பல லட்சம் தேர்வு எழுதி உள்ளதால், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருத்த நேரம் எடுக்கும் என்கிறார்கள். இதனால் திருத்தம் ஜனவரி 2025தான் முடியும் என்கிறார்கள்.டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் குறைந்தது ஆறு மாதம் வரை காத்திருக்கக வேண்டியது வரலாம்.