ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்திய கடை உரிமையாளருக்கு சிறை.. கடையும் மூடப்பட்டதால் அதிர்ச்சி..!

By Bala Siva

Published:

கடை ஊழியருக்கு சம்பளத்தை அதிகரித்த கடை உரிமையாளருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதோடு அவருடைய கடையும் மூடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மியான்மர் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மர் நாட்டில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மியான்மர் நாட்டில் செல்போன் கடை வைத்திருக்கும் ஒருவர் தனது கடை ஊழியருக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்த நிலையில் அவரை கைது செய்த அதிகாரிகள் அவரது மூன்று கடையையும் மூடிவிட்டனர். மேலும் இதே குற்றச்சாட்டில் 10 கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அரசின் அனுமதி இன்றி ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியதாகவும் , ஒழுங்கற்ற சட்டத்தின் கீழ் அவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஊதிய உயர்வு வழங்கினால் அது நாட்டின் அமைதியை கெடுக்கும் என்று மியான்மர் அரசு இந்த கைது நடவடிக்கைக்கு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் நாட்டின் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை சீர்குலைத்தவர்கள் என்று அவர்களது புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கடை ஊழியர்கள் கூறும் போது ’சம்பளத்தை உயர்த்தியதால் நாங்கள் மிகவும் சந்தோஷப்பட்டோம், ஆனால் இப்போது வேலையும் இல்லை கடையும் இல்லை, நாங்கள் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை’ என்று விரக்தியுடன் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சட்டத்துறை வல்லுனர் குறித்து இது குறித்து கூறிய போது ’பண வீக்கம் அதிகரித்துள்ளதாக மக்களை நம்ப வைத்து தவறான ஆட்சி நடைபெறுகிறது’ என்று கூறியுள்ளார்.

மியான்மர் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டு தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது என்பதும் மக்களின் கிளர்ச்சியை ஒடுக்கவும் பண வீக்கத்தை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.