ஆடி மாசத்துல இலவச அம்மன் கோவில்கள் தரிசன சுற்றுலா.. மூத்த குடிமக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு..

By John A

Published:

சென்னை : தமிழகத்தில் இந்து சமயத்தினைப் பின்பற்றி வரும் 60-வயது வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கையின் விவாதத்தில் 2024-2025-ம் நிதி ஆண்டில் ஆடி மாதத்தில் 60-70 வயதுடைய மூத்த குடிமக்களை தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களைத் தரிசிக்க ஆன்மீகச் சுற்றுலா திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 1000 பக்தர்கள் இந்த ஆன்மீகச் சுற்றுலாவில் பங்கு பெறலாம். இதற்காக தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதியாக வழங்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆன்மீகச் சுற்றுலாவிற்கான முன்பதிவு மற்றும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மண்டலங்கள் பிரிக்கப்பட்டு புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுமார் 1000 பக்தர்கள் இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளனர்.

சென்னை மண்டலத்தில் மயிலை கற்பககாம்பாள் ஆலயம், பாரிமுனை அன்னை காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூர் வடிவுடை அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் ஆகிய இடங்களும், தஞ்சை மண்டலத்தில் தஞ்சை பெரிய கோவில், வராகி அம்மன், பங்காரு காமாட்சி அம்மன், புன்னை நல்லூர் மகாமாரியம்மன், திருக்கருகாவூர் கற்பகரட்சாம்பிகை, பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் ஆகிய இடங்களுக்கும்,

கோவை மண்டலத்தில் கோனியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன், ஆனைமலை மாசானி அம்மன், அங்காளம்மன், சூலக்கல் மாரியம்மன், தண்டு மாரியம்மன் ஆகிய இடங்களுக்கும், அதேபோல் திருச்சியில் உறையூர் வெக்காளி அம்மன், திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி, சமயபுரம், உஜ்ஜையினி கோவில் ஆகிய பகுதிகளுக்கும், மதுரை மண்டலத்தில் மதுரை மீனாட்சி, வண்டியூர் மாரியம்மன், மடப்புரம் காளியம்மன், அழகர்கோவில் ராக்காயி கோவில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவில், நெல்லை மண்டலத்தில் குமரி பகவதிஅம்மன் கோவில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன், மண்டைக்காடு பகவதி அம்மன், முப்பந்தல் இசக்கி அம்மன், குழித்துறை சாமுண்டி அம்மன் போன்ற கோவில்களும் இந்த பயணத்திட்டத்தில் அடங்கும்.

வருகிற ஜுலை 19, 16 ஆகஸ்ட் 2,9 ஆகிய நாட்களில் தொடங்கப்படும் இந்த பயணத்திற்கு www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாள் 17.07.2024.