அமெரிக்க அரசு ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த பெண்ணை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.40 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக பிட்காயின் பரபரப்பாக வர்த்தகமும் ஆகிக்கொண்டிருந்த நிலையில் தான் திடீரென ஒன்காயின் என்ற ஒரு புதிய அறிமுகம் செய்யப்பட்டது. பிட்காயினுக்கு போட்டியாக இந்த ஒன்காயின் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதில் ஏராளமானோர் முதலீடு செய்தார்கள் என்பதும் உலகம் முழுவதிலும் இருந்து பில்லியன் கணக்கில் முதலீடு குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காயினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்ததாக கூறி அறிமுகம் செய்தவர் ருஜா என்ற இளம்பெண். இவர் கொடுத்த விளம்பரங்களால் ஏராளமானோர் ஒன்காயின் மீது முதலீடு செய்ய நிலையில் ஒரு கட்டத்தில் மூன்று மில்லியன் பேர் சுமார் 40 பில்லியன் டாலர் முதலீடு செய்ததாக அந்த நிறுவனமே ஒரு விளம்பரம் மூலம் அறிவித்தது.
இந்த நிலையில் தான் திடீரென முதலீட்டாளர்கள் பணத்தை கேட்கும் போது ருஜா பணத்தை திரும்பி தரவில்லை என்றும் இவர் மீது ஏராளமான புகார் வந்ததை அடுத்து தான் அமெரிக்க புலனாய்வு பிரிவு இதுகுறித்து விசாரணை செய்தது. அப்போது பல திடுக்கிடும் ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து ருஜாவை கைது செய்ய முடிவு செய்த நேரத்தில் தான் திடீரென அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்.
இதனை அடுத்து கிரீஸ் அரசுடன் தொடர்பு கொண்டு அந்த பெண்ணை கைது செய்ய முயற்சி செய்தபோது அவர் தலைமறைவானார். ருஜா தலைமறைவாகி 7 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால் அவரை கண்டுபிடிக்க சன்மானம் பணம் அறிவிக்கப்பட்டது. ஒரு லட்சம் டாலர் தொடங்கி தற்போது படிப்படியாக சன்மான அளவு அதிகரித்த நிலையில் தற்போது 5 மில்லியன் டாலர் சன்மானம் என்று அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு அமைப்பு அறிவித்துள்ளது.
இருப்பினும் ருஜா சம்பந்தப்பட்ட சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இன்னும் ருஜாவை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த பெண்ணை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு 40 கோடிக்கும் அதிகமாக பணம் கிடைக்கும் என்பதால் பலர் அந்த பெண்ணை தேடி வருவதாக கூறப்படுகிறது.