மதுரை: தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு நிரப்பப்பட உள்ள நிலையில், பணி நியமன அறிவிப்பிற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி, திருச்சி முத்து செல்வம் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலியிடங்களை நிரப்பும் வகையில், ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப் 4 எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடந்து முடிந்தது. வழக்கமாக பணி நியமன செயல்முறை முடிந்த பிறகுதான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை டிஎன்பிஎஸ்சி வெளியிடும். ஆனால் இந்த முறை பணி நியமன அறிவிப்பிற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை டிஎன்பிஎஸ்சி வெளியிட உத்தரவிட வேண்டும்.
ஏனெனில் டிஎன்பிஎஸ்சி பணி நியமன செயல்முறை முடிந்த பிறகு குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை வெளியிடும் போது தேர்வர்கள் பாதிக்கப்படுவது நடக்கிறது. எனவே, சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை, பணி நியமன பட்டியல் வெளியிடுவதற்கு முன் வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரியிருந்தனர்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, அண்மையில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை, பணி நியமன பட்டியல் வெளியிடுவதற்கு முன் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் மூலம் எந்த வருடமும் இல்லாத நல்ல மாற்றம் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு நடக்க போகிறது.