6 மாசம் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமா… ஹர்திக் கண்ணீருக்கு பின்னால் இருந்த வேதனையான காரணம்..

By Ajith V

Published:

இந்திய கிரிக்கெட் அணி பற்றி தான் அடுத்த சில தினங்களுக்கு சமூக வலைத்தளங்கள் முழுவதும் பேச்சுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு ஒரு முக்கியமான தருணத்தை கிரிக்கெட் அரங்கில் பதிவு செய்துள்ளது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. டி20 உலக கோப்பை தொடர் அறிவிப்பு வந்த நாள் முதலேயே அதனை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியாவும் கருதப்பட்டு வந்தது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல பெரிய தலைகளுக்கு மத்தியில் நிச்சயம் ரோஹித் ஷர்மா முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்று பெருமை சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தவர்களை கொஞ்சம் கூட ஏமாற்றாமல் அதனை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

ஒரு பக்கம் இந்திய அணியை பொறுத்தவரையில் சில வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் போனாலும் இன்னொரு பக்கம் ரோஹித், சூர்யகுமார் யாதவ், பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பலரும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லவும் உதவியிருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி 15 ஓவர் வரை ஆடிக்கொண்டிருந்த போது இந்திய ரசிகர்களே நாம் தோற்று விடுவோம் என்று அச்சத்தில் தான் இருந்தனர்.

ஆனால் எங்கோ கைவிட்டு தென் ஆப்பிரிக்காவை நோக்கி சென்று கொண்டிருந்த போட்டியை இந்திய பந்து வீச்சாளர்கள் இழுத்து பிடித்து கோப்பையை சொந்தமாக்க உதவி இருந்தனர். இந்த ஒரு போட்டியில் கோலி, ரோஹித் தொடர்பாக பல எமோஷனல் தருணங்களும் அரங்கேறியிருந்த நிலையில் நிச்சயம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு போட்டியாகவும் தற்போது இந்த தொடர் மாறி உள்ளது.

அப்படி ஒரு சூழலில் இந்திய அணி இந்த இடத்தில் நிற்பதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் தான் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் மும்பை அணியின் கேப்டனாக இந்த முறை தலைமை தாங்கிய போது அவருக்கான எதிர்ப்பு குரல்கள் தான் அதிகமாக இருந்தது. தனது அணியின் ரசிகர்களே மைதானத்தில் இருந்து எதிர்ப்பினை தெரிவிக்க நெருக்கடியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலுயுமே சொதப்பி இருந்தார்.

அப்படி ஒரு சூழலில் இந்த முறை பவுலிங், பேட்டிங் என அனைத்திலும் பட்டையை கிளப்பியிருந்த ஹர்திக் பாண்டியா, கடைசி 2 ஓவர்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றியையும் உறுதி செய்திருந்தார். அவரது இடத்தை நிச்சயம் எந்த வீரராலும் நிரப்பியிருக்க முடியாது என்ற அளவுக்கு தனது ஆடடத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனிடையே, இந்திய அணி கோப்பையை வென்றதுக்கு பின் பேசியிருந்த ஹர்திக் பாண்டியா, “இது மிகவும் எமோஷனல் தருணம். தொடர்ந்து நாங்கள் ஒரு அணியாக கடினமாக உழைத்தும் ஏதோ ஒன்று மட்டும் சொதப்பிக் கொண்டே இருந்தது. ஆனால் இந்த முறை ஒட்டுமொத்த நாடும் நினைத்த விஷயத்தை நாங்கள் நிறைவேற்றி விட்டோம். கடந்த ஆறு மாதங்கள் அந்த அளவுக்கு நான் அவமானங்களை சந்தித்தேன்.

ஒரு வார்த்தை கூட நான் அப்போது பேசாமல் இருந்தேன். இதனால் தொடர்ந்து கடினமாக உழைத்தால் நிச்சயம் நம்மால் ஜொலிக்க முடியும் என்பது எனக்கு தெரியும். அதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது, எனக்கு மிகவும் ஸ்பெஷலான தருணமாகவும் அமைந்துள்ளது” என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.