12 வருசமா காத்திருந்த வைரமுத்து.. பல இசையமைப்பாளர்கள் நிராகரித்த வரிகளுக்கு 10 நிமிடத்தில் உயிர் கொடுத்த இசைப்புயல்..

By Ajith V

Published:

ரசிகர்கள் மத்தியில் ஒரு பாடல் எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறதோ அதற்கு இசையமைப்பாளரின் பெரிதாக இருக்கும். ஆனால், அதே போல இசைக்கருவிகள் மூலம் ஒரு இசையமைப்பாளர் செய்யும் புதுமைக்கு நிகராக, பாடலில் வரும் வார்த்தைகளில் புதுமையை புகுத்தும் பாடலாசிரியர்கள் பங்கும் மிகப்பெரிது.

இசையமைப்பாளரின் ராகத்திற்கேற்ப, பாட்டில் எந்த வார்த்தைகளை வைத்தால் ரசிகர்கள் தங்களுடன் இணைத்து தாக்கத்தை உருவாக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கடினமாக உழைத்து வரிகளை தயார் செய்வார்கள். இப்படி எப்போதுமே தங்களின் பாடல் வரிகளால் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் நீண்ட காலம் சிறந்த பாடலாசிரியர்களாக திரைதுறையில் நிலைத்து நிற்கவும் முடியும்.

அந்த வகையில், கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, வைரமுத்து, நா. முத்துக்குமார், தாமரை, பா. விஜய் என பலரை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அதில் மிக முக்கியமான ஒரு கவிஞர் தான் வைரமுத்து. இளையராஜாவின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமான வைரமுத்து, அவருடன் ஒரு கட்டத்திற்கு பின்னர் கருத்து வேறுபாடு உருவாகி பிரிந்து தற்போது வரை சண்டையில் தான் உள்ளார்.

ஆனால், ஏ. ஆர். ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என எந்த காலத்து இசையமைப்பாளார்களுக்கும் செட் ஆகக்கூடிய வரிகளை உருவாக்கி பல ஹிட் பாடல்கள் எழுதி தேசிய விருது, ஃபிலிம்பேர் விருது உள்ளிட்ட பலவற்றை வென்றுள்ளார் வைரமுத்து. அப்படி இருக்கையில், அவர் எழுதி வைத்த பாடல் ஒன்றை 12 ஆண்டுகளாக பல இசையமைப்பாளர்கள் நிராகரிக்க, அதனை ஏ. ஆர். ரஹ்மான் எவர்க்ரீன் ஹிட் ஆக்கியதை பற்றி தற்போது பார்க்கலாம்.

இது தொடர்பாக மேடை ஒன்றில் பேசி இருந்த வைரமுத்து, “ஒரு பாட்டை 12 ஆண்டுகளாக எழுதி கையில் வைத்திருந்தேன். எம்.எஸ்.வியிடம் கொடுத்தேன், திரும்ப வந்தது. ஷங்கர் கணேஷிடம் கொடுத்தேன், திரும்ப வந்தது. இப்படி பலரும் அந்த பாடலை நிராகரிக்க, 12 ஆண்டுகளாக எப்படியாவது அதனை இசையமைத்துவிட வேண்டுமென கையிலே வைத்திருந்தேன்.

அப்போது ஒரு நாள் சுரேஷ் மேனன் என்னிடம் புதிய முகம் என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக இலங்கை போக வேண்டியிருந்ததால் அவசரமாக பாட்டு ஒன்று வேண்டுமென கேட்டார். உடனே நான் ஏ. ஆர். ரஹ்மானிடம் இந்த வரிகளை கொடுக்க, 10 நிமிடத்தில் அவர் இசையமைத்தார். அப்படி உருவான பாட்டு தான் ‘கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு’ என்ற பாடல்” என நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் வைரமுத்து.