என்னது.. கடைசியா விக்கெட் எடுத்தது கோலியா.. டி 20 உலக கோப்பையின் முக்கிய ரெக்கார்ட்.. மிரண்டு பார்க்கும் ரசிகர்கள்..

By Ajith V

Published:

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து ஆடவுள்ள போட்டி மிக முக்கியமான ஒன்றாகும். கடந்த பல ஆண்டுகளாகவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு நிகராக சர்வதேச அரங்கில் நம்பர் 1 அணியாகவும் இருந்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. ஆனாலும், ஐசிசி தொடர் கோப்பை மட்டும் இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

ரோஹித், கோலி, பும்ரா, ஹர்திக் பாண்டியா தொடங்கி சிறந்த துடிப்பான இளம் வீரர்கள் வரை இந்திய அணியில் இருந்த போதிலும் ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டிகள் என வரும் போது யாராவது சொதப்பி தோல்வி அடையும் நிலையும் உருவாகி இருந்தது. ஆனால் இந்த முறை அப்படி எதுவும் நடக்காமல் நிச்சயம் டி 20 உலக கோப்பையை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று தான் தெரிகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலக கோப்பைத் தொடரின் அரையிறுதி போட்டி வரை முன்னேறி இருந்த இந்திய அணி, இங்கிலாந்தை தான் எதிர்கொண்டிருந்தது. இதில் இந்திய அணி 168 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் இலக்கை அசாதாரணமாக எட்டிப் பிடித்திருந்தது.

இந்த முறையும் இந்திய அணி இங்கிலாந்தை தான் அரையிறுதியில் சந்திக்க உள்ளது. ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அவர்களை வெளியே அனுப்பி பழி வாங்கியது போல, இங்கிலாந்து அணியையும் இந்திய அணி வீழ்த்தி நிச்சயம் இறுதி போட்டிக்கு முன்னேறி பட்டையை கிளப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழலில் இந்திய அணிக்காக டி20 உலக கோப்பையின் நாக் அவுட் போட்டியில் கடைசியாக விக்கெட் எடுத்த வீரராக விராட் கோலி இருந்து வருகிறார். 2021 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நடந்த அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டு தான் இந்திய அணி டி 20 உலக கோப்பையின் நாக் அவுட் போட்டி ஒன்றில் மோதி இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இரண்டாவது அரையிறுதியில் மோதி இருக்க, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 192 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் கடைசி ஓவரில் இலக்கை எட்டிப் பிடிக்க, இறுதி போட்டிக்கும் முன்னேறி கோப்பையை கைப்பற்றி இருந்தது.

முன்னதாக அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்த கடைசி விக்கெட்டான ஜான்சன் சார்லஸை கோலி தான் அவுட் எடுத்திருந்தார். அதன் பின்னர் ஒரே ஒரு நாக் அவுட் போட்டியில் இந்திய அணி மோதி இருந்தது. 8 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அவர்கள் நாக் அவுட் போட்டி ஒன்றில் டி 20 உலக கோப்பையில் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.