சிவகங்கை: தமிழக அரசு சார்பில் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு 10 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. புதிய தொழில் தொடங்க தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “படித்த, முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற 2024-2025-ம் நிதியாண்டிற்கு 32 நபர்களுக்கு மானியத்தொகை ரூ.3 கோடியே 11 லட்சம் என இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்க குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு அரசின் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறலாம். இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். கல்வி தகுதியாக 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டயபடிப்பு, பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பொதுப்பிரிவினராய் இருப்பின் 45 வயதிற்கு மிகாமலும், சிறப்பு பிரிவினராக (ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள்) இருப்பின் 55 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வருமான வரம்பு ஏதுமில்லை.
3 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும் இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால் திட்ட மதிப்பீட்டில் சொந்த முதலீடு 10 சதவீதமாகவும் மற்றும் சிறப்பு பிரிவினராக இருந்தால் 5 சதவீதமாகவும் இருத்தல் வேண்டும்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மும்முனை மானியமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் (அதிகபட்சம் ரூ.10 லட்சம்) மானியமும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பங்குதாரர் நிறுவனங்களும் பயன்பெறலாம்.
எனவே, புதிய தொழில் தொடங்க தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளரை நேரிலோ அல்லது 04567-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ, 8925533989 மற்றும் 8925533990 ஆகிய செல்போன் எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” இவ்வாறு சிவகங்கை கலெக்டர் கூறியுள்ளார்.