தமிழக அரசியல்வாதிகள் விளம்பர பிரியர்கள் என்றும் அவர்கள் தங்களுக்கு தாங்களே பேனர் வைத்துக் கொள்வார்கள், கட் அவுட் வைத்துக் கொள்வார்கள் என்றும் ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக அரசியல்வாதிகளின் பிறந்தநாள் வந்தால் உடனே நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் பேனர்கள் நகர் முழுவதும் இருக்கும் என்பதும் இந்த பேனர்கள் சில சமயம் காற்றில் விழுந்து காயங்கள் மற்றும் உயிர் பலி ஏற்படும் அளவுக்கு கூட விபரீதம் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர்களில் இருந்து அரசியல்வாதியாக பதவி உயர்ந்துள்ள நடிகர் விஜய்யும் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவரது தரப்பில் இருந்து ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் மாநில முழுவதும் வைக்கப்பட்டன.
விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் கட்சியின் தொண்டர்கள் இந்த கட் அவுட்டுகளையும் பேனர்களையும் வைத்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் என்ற பகுதியில் பலத்த காற்றின் காரணமாக விஜய் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பேனர் சாலையில் சரிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற 10 வயது சிறுவன் மீது பேனர் விழுந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே இப்போதுதான் கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் பலியாகி உள்ள நிலையில் சிறுவன் பேனர் விழுந்ததால் நூலிழையில் உயிர் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற அரசியல்வாதிகள் தான் சுய விளம்பரத்திற்காக பேனர்கள் கட் அவுட்டுகள் வைக்கிறார்கள் என்றால் விஜய் போன்ற இளம் அரசியல்வாதிகளும் அதையே செய்ய வேண்டுமா என்றும் அவரும் பேனர் கலாச்சாரத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும் அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
பேனர் கீழே விழும்போது அதன் அடியில் 10 வயது சிறுவன் சிக்கிக் கொண்டதை அடுத்து அங்கு இருந்தவர்கள் அதை பார்த்ததால் அந்த சிறுவனின் உயிர் மீட்கப்பட்டதாகவும் இல்லாவிட்டால் விபரீதம் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விஜயும் பத்தோடு பதினொன்று அரசியல்வாதிதானா என்று விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.