இந்திய அணி நல்ல ஃபார்மில் இருந்து தற்போது அரையிறுதி வரை முன்னேறி இருந்தாலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை விராட் கோலி மீது தான் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் விராட் கோலி. அரை இறுதியில் இந்திய அணி தோற்று வெளியேறியிருந்தாலும் அதன் பின்னர் கடந்தாண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பை தொடரிலும் விராட் கோலி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தார்.
அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் கோலி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் அடித்தது அவர்தான். இப்படி தொடர்ச்சியாக பல முக்கியமான தொடர்களில் நிறைய ரன்கள் குவித்து சாதனை செய்து வந்த விராட் கோலியால் டி20 உலக கோப்பை தொடரில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
இதுவரை ஒரு முறை கூட 40 ரன்கள் கடக்காமல் இருந்து வரும் விராட் கோலி, 6 போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 66 ரன்கள் தான் அடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நான்கு ரன்களில் அவுட்டாகி இருந்த கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டக் அவுட்டாகி இருந்தார். அமெரிக்காவுக்கு எதிராகவும் டக் அவுட்டான விராட் கோலி வங்காளதேசத்திற்கு எதிராக அடித்த 37 ரன்கள் தான் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ள இந்திய அணிக்கு நிச்சயம் விராட் கோலி பேட்டிங் தாக்கத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும். நாக் அவுட் போட்டிகளில் பலமுறை இந்திய அணியை காப்பாற்றியுள்ள விராட் கோலி நிச்சயம் இந்த முறையும் மீண்டும் அதனை செய்வார் என்று தெரிகிறது. அப்படியே அவர் செய்யத் தவறினால் இந்திய அணி மீண்டும் ஒருமுறை ஐசிசி நாக் அவுட் போட்டியில் சோக் ஆகி வெளியேற வேண்டிய நிலை தான் உருவாகும்.
அப்படி இருக்கையில் விராட் கோலி டி20 உலக கோப்பையில் பேட்டிங் செய்து இந்திய அணி முதல் முறையாக தொட்ட உயரம் ஒன்றை பற்றி தற்போது பார்க்கலாம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 205 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுக்க இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை ருசித்திருந்தது. அப்படி இருக்கையில் முதல் முறையாக விராட் கோலி பேட்டிங் செய்த ஒரு டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 200 ரன்களை கடந்துள்ளது.
பல ஆண்டுகளாக டி20 உலக கோப்பையில் விராட் கோலி ஆடி வந்தாலும் முதல் முறையாக இப்படி ஒரு சம்பவம் நடந்தது அனைவரையுமே அசர வைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 210 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது. ஆனால், அந்த போட்டியில் கோலி பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.