ஆஸி.க்கு எதிரா காட்டடி.. 2 நாள் முன்னாடியே அது பத்தி ரோஹித் சொன்ன வார்த்தை.. இதுனால தான் அவரு கேப்டன்..

By Ajith V

Published:

முதலில் டி 20 உலக கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டியில் இருந்து சூப்பர் 8-ற்கு யார் முன்னேறுவார்கள் என்ற கேள்வி இருந்தது. அந்த வகையில் பல விறுவிறுப்பான போட்டிகளின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் முன்னேறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நடந்த போட்டியில் குரூப் 2 வில் இருந்து இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா இருந்த பிரிவில் தான் தொடர்ந்து இழுபறி இருந்து வந்தது. இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு எளிதாக முன்னேறினாலும் மீதம் இருக்கும் ஒரு இடத்திற்காக மூன்று அணிகளுக்கும் இடையே போட்டி இருந்தது.

இதற்கு மத்தியில் தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி இருந்த போட்டியின் முடிவின் அடிப்படையில் இரண்டாவது அணியும் குரூப் 1ல் இருந்து தேர்வாகும் நிலை இருந்தது. மேலும் இந்த விறுவிறுப்பான கட்டத்தில் வங்காளதேச அணியை முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் அரையிறுதிக்கும் முன்னேறி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

இதனைத் தொடர்ந்து முதல் அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும், இரண்டாவது அரை இறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளது. இதனிடையே இந்திய அணி இதுவரை டி20 உலக கோப்பைத் தொடரில் ஆடியுள்ள ஆறு போட்டிகளிலும் எளிதான வெற்றியை பெற்றிருந்ததுடன் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா அணியை பழி தீர்த்தது தான் சிறப்பம்சமாகவும் உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஐசிசி தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்தது இந்திய அணி. இதே போல, ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி போட்டியிலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தவறவிட்ட இந்திய அணி அனைத்திற்கும் சேர்த்து பழி தீர்ப்பதற்காக காத்திருந்து வந்தது.

அப்படி ஒரு சூழலில் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8ல் அவர்களுக்கு எதிராக, 205 ரன்கள் எடுத்த இந்திய அணி, 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த தோல்வியால் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பும் பறிபோக, கேப்டன் ரோஹித் ஷர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்திருந்தார். முழுக்க முழுக்க பவுண்டரிகளாகவ பறக்க விட்டு கொண்டிருந்த ரோஹித், 8 ரன்களில் சதத்தை தவற விட்டதால் அனைவரும் ஏங்கிப் போயினர்.

ஆனால் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசி இருந்த ரோஹித் ஷர்மா, சதங்கள் மற்றும் அரைச்சதங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை என்றும் ஒரு பேட்ஸ்மேன் பந்து வீச்சாளர்களுக்கு கொடுக்கும் நெருக்கடியே டி 20 போட்டிகளில் முக்கியமான விஷயம் என்றும் கூறியிருந்தார். அவர் கூறியது போலவே சதத்தைப் பற்றி பொருட்படுத்தாமல் அதிரடியை மட்டுமே கையில் எடுத்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடி போட்டு வெற்றியையும் ரோஹித் எட்டிப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.