கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி: தமிழக அரசு, காவல்துறையின் அலட்சியப் போக்கே காரணம் : பா.ரஞ்சித்

By John A

Published:

கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் நேற்று கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு வரிசையாக உடல்நலக்குறைபாடு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பலர் கவலைக்கிடமான நிலையில் வர, மருத்துவமனை பரபரப்பானது. முதல் பலி ஏற்பட்ட போது அரசின் கவனத்திற்குச் கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து நேற்று முதல் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் தற்போது வரை 39 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்திற்று நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்துவரும் வேளையில் தமிழக அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனங்களை பேட்டிகளிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன், தவெக தலைவர் விஜய் ஆகியோரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தனது கண்டனத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

அதில், கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும், பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 இலட்சம்.. சிகிச்சை பெறுவோருக்கு 50 ஆயிரம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோரைக் கடுமையாக தண்டிப்பதோடு மட்மல்லாமல் இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் !

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்!”

இவ்வாறு பா.ரஞ்சித் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.