1979ல் துரை இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் நீயா. இதில் ஸ்ரீபிரியா பாம்பாக நடித்து இருப்பார். சாதாரணமாக பழிவாங்கும் கதை தான். ஆனால் பாம்பை வைத்து இப்படி தத்ரூபமாக எடுக்க முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்தது படம்.
மனித உருவிற்கு மாறும் பாம்பு ரசிகர்களுக்கு அப்போது புதுக்கதையாக இருந்தது. இதனால் ரொம்பவே ஆர்வமாகப் பார்த்தார்கள். அதிலும் திரைக்கதை விறுவிறுப்பாக இருந்தது.
சங்கர் கணேஷின் இசையில் பாடல்கள் எல்லாமே அற்புதமாக இருந்தது. அதிலும் ஒரே ஜீவன் என்ற பாடல் படத்தில் அடிக்கடி வந்து நம்மை ரசிக்க வைத்தது. நான் கட்டின் மேலே கண்டேன் வெண்ணிலா என்ற பாடல் இந்தப் படத்தில் தான் உள்ளது. இந்தப் படம் எப்படி உருவானது என்று பார்ப்போம்.
வைஜெயந்திமாலா இந்தித் திரையுலகில் பிரபலமாகி இருந்த காலகட்டம். அவர் ‘நாகின்’ என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக பிரதீப்குமார் நடித்தார். மகுடி வாத்தியத்தில் அமைந்த பாடல்கள் எல்லாமே அற்புதம்.
படத்தில் அவரை ஒரு பாடல் மட்டும் ரொம்பவும் கவர்ந்ததாம். அதற்காகவே அந்தப் படத்தை 6 தடவை பார்த்தாராம். உடன் அவரது தாயாரும் படம் பார்க்க சென்று இருந்தாராம். இது போல ஒரு பாடல் நான் நடிக்கும் படத்தில் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று அங்கலாய்த்தாராம் ஸ்ரீபிரியா.

‘உடனே அவ்வளவு தானே. கவலையை விடு’ன்னு அம்மா சொன்னாராம். அதன் அர்த்தம் விளங்க ஒரு வாரம் ஆகிவிட்டதாம். நாகின் படத்தைத் தமிழில் தயாரிக்கும் உரிமையை வாங்கி விட்டார். டைரக்டர் துரையை அழைத்து அந்தப் படத்தை இயக்கச் சொல்லிவிட்டார். அவரும் ஓகே சொல்ல படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வாயினர்.
கமல், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சந்திரமோகன் என ஒரே படத்தில் 6 ஹீரோக்கள். முக்கிய ரோலில் ஸ்ரீபிரியா நடித்தார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் என்ற உயிர் நாடியுள்ள பாடல் படத்தில் திரும்ப திரும்ப வந்து பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்தப் படத்தைப் பற்றி நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஸ்ரீபிரியாவை அழைத்துப் பாராட்டினாராம். அவர் சொன்னது இதுதான்.
படம் பார்த்தேன். பாம்பா உன் கூட நடனமாடுற பையன் என்னமா டான்ஸ் ஆடுறான்? அவன் கெட்டப்பும், கொண்டையும் அழகும்… அடடா..! இந்தக் கேரக்டருக்கு என்னை ஏன் புள்ள கூப்பிடல?ன்னு கேட்டார். எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி.
மறுபக்கம் ஆனந்தம் என்றார் நடிகை ஸ்ரீபிரியா. கலை எங்கு நன்றாக இருந்தாலும் அதைத் தேடிச் சென்று பாராட்டுவதில் வல்லவர் நடிகர் திலகம். அதனால் தான் அவர் புகழின் உச்சிக்குச் சென்றார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


