தமிழ் சினிமாவில் பல சிறப்பான திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமாக இருந்தவர் தான் இசையமைப்பாளர் பரணி. நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவான பெரியண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார்.
இந்த ஆல்பம் பெரிய ஹிட் ஆனதால், அடுத்ததாக பார்வை ஒன்றே போதுமே என்ற திரைப்படத்திலும் பின்னர் சார்லி சாப்ளின், பேசாத கண்ணும் பேசுமே, சுந்தரா டிராவல்ஸ், ஜெயா என ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார் பரணி. இது தவிர முன்னணி நடிகராக விஜய்யின் முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு படத்திலும் இவர் பாடலாசிரியராக பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய 20 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள பரணி, ஒண்டிக்கட்ட என்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இதனிடையே இவரது முதல் திரைப்படமான பெரியண்ணாவில் எஸ்பிபி ஒரு பாடல் பாடிய சமயத்தில் நடந்த சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.
விஜயகாந்த், சூர்யா, மீனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த திரைப்படம் தான் பெரியண்ணா. எஸ். ஏ. சந்திரசேகர் இந்த படத்தை இயக்க பரணி இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படத்தில் எஸ்பிபி, ஹரிஹரன், விஜய் என அனைவர் பாடியிருந்த பாடல்களும் ஹிட் அடித்திருந்தது. தந்தானே தாமரை பூ என்ற பாடலை தான் எஸ்பிபியும் சித்ராவும் இணைந்து பாடி இருந்தனர்.
தனது முதல் திரைப்படம் என்பதால் இந்த பாடலை எஸ்பிபி பாட வேண்டும் என இயக்குனரிடம் பரணி கூற, அவரும் அந்த பாடல் பாடிக் கொடுத்துள்ளார். முதல் படம் என்பதால் பெரிய பாடகர் மத்தியில் பதட்டமாகவே இருந்த பரணி, அந்த அளவுக்கு குறைகள் சொல்லாமல் அப்படியே எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடியதை ரெக்கார்ட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் பரணி எஸ்பிபி இந்த பாடலை இன்னொரு பரிமாணத்தில் பாட வேண்டும் என நினைக்க, பயத்தில் அதை சொல்லாமல் விட்டதாகவும் எஸ் ஏ சந்திரசேகரிடம் கூறியுள்ளார். இதனால் மீண்டும் ஒருமுறை எஸ்பிபி வந்து பாட வேண்டும் என்ற விருப்பத்தையும் பயந்து கொண்டே அவரிடம் கூறியுள்ளார் பரணி. தந்தானே தாமரை பூ என்ற பாடலை திரும்பவும் பாடுவதற்காக சில தினங்கள் கழித்து வந்த எஸ்பிபி கோபத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நன்றாக பாடி இருக்கும் பாட்டை எதற்கு நான் திரும்ப பாட வேண்டும் என எஸ்பிபியும் கோபத்துடன் பரணியிடம் கேட்க, சில இடங்களில் தான் வேறு மாதிரி பாட வேண்டும் என்று நினைத்ததாகவும் கூறி அதனை பரணியும் பாடிக் காட்டியுள்ளார். அந்த விஷயங்களில் உள்ள புதுமையை புரிந்து கொண்ட எஸ்பிபி நிதானமாக பாடி கொடுத்து விட்டு சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றது.