பாரதிராஜாவுடன் மீண்டும் இணைய விரும்பிய இளையாராஜா.. பிடிவாதமாக நோ சொன்ன சுந்தரம் மாஸ்டர்.. பின்னணி இதான்..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவின் இசை மேதை என அறியப்பட்டு வருபவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஒரு காலத்தில் படம் சிறப்பாக அமையவில்லை என்றாலும் இளையராஜாவின் பாடலுக்காகவே திரையரங்கில் கூட்டம் கூடி தோல்வியடைய சூழலில் இருக்கும் படங்கள் வெற்றி படமாக மாறிய வரலாறு ஏராளமானது உண்டு. அப்படி காட்சிகளாக தோல்வியடைந்தாலும் தனது பாடல்களால் அந்த காட்சிக்கு உயிரூட்டி ஹிட் அடிப்பதில் தேர்ந்த கலைஞர் தான் இளையராஜா.

ஏறக்குறைய 50 ஆண்டுகளாக இசை உலகில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் இளையராஜாவின் பாடல்கள் தற்போதுள்ள இளைஞர்களுக்கும் ஃபேவரைட் பாடல்களாக உள்ளது. அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவுடன் இணைந்து ஏராளமான ஹிட் பாடல்களையும் உருவாக்கியுள்ளார் இளையராஜா. ஆனால் ஒரு கட்டத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானதால் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடி தென்றல்’ திரைப்படத்திற்கு பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து எந்த படத்திலும் பணிபுரியவில்லை.

அப்படி ஒரு சூழலில் தான், இவர்கள் இருவரையும் இணைக்கும் பொன்னான வாய்ப்பு பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு வந்துள்ளது. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி. சிவா, இது பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய கருத்தின் படி பிரபல எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆர் செல்வராஜ் ராசைய்யா என்ற கதையை எழுதி அதனை இளையராஜாவிடம் விளக்கி உள்ளார்.

அப்போது இந்த கதையை கேட்டதும் டி சிவாவிடம் இந்த படத்தை இயக்க போவது யார் என்பது பற்றி கேட்ட இளையராஜாவிடம், ஆர் செல்வராஜின் சகோதரர் ஆர். கண்ணன் இயக்குனராக அறிமுகமாக போகிறார் என தெரிவித்துள்ளார். அதனை நிராகரித்த இளையராஜா இந்த கதையை சிறப்பாக எடுக்க பாரதிராஜா தான் சிறந்த ஆள் என்றும் நானும் அவரும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் இந்த படத்திற்காக உனது தயாரிப்பில் நான் பாரதிராஜாவுடன் இணைந்து பணிபுரிய தயார் என்றும் கூறியுள்ளார்.

இந்த கதைக்காகவும், உனக்காகவும் மீண்டும் பாரதிராஜாவுடன் இணைகிறேன் என இளையராஜா கூறியதும் தமிழ் சினிமாவின் இரண்டு சிகரங்களை இணைக்கும் அதிர்ஷ்டம் தனக்கு கிடைக்க போகிறது என அறிந்து டி சிவா கனவுலகத்தில் பறக்கத் தொடங்கி விட்டார்.

இந்த படத்தில் பிரபுதேவா நடிப்பதாக இருந்ததால் உடனடியாக அவரது தந்தை சுந்தரம் மாஸ்டரிடம் இளையராஜா, பாரதிராஜாவை இயக்குனராக இந்த கதைக்கு அறிவிக்கலாம் என விரும்பியதை பற்றி தெரிவித்துள்ளார். ஆனால் ஆர். கண்ணனிடம் தான் வாக்கு கொடுத்து விட்டதாகவும் அவர்தான் இயக்குனர் என்றும் கூறிவிட்டார் சுந்தரம் மாஸ்டர்.

மேலும், அப்படி அதனை மாற்ற வேண்டும் என்றால் தயாரிப்பாளரை மாற்றுவது தான் சிறப்பாக இருக்கும் என டி சிவாவிடம் கூற, அவர் இதைக் கேட்டதும் உடைந்து போயுள்ளார். ஒரு வேளை பாரதிராஜா மற்றும் இளையராஜா மீண்டும் இணைந்திருந்தால் நிச்சயம் தயாரிப்பாளராக டி. சிவா பல ஆண்டுகளுக்கு நிலைத்து நின்றிருப்பார். அந்த வாய்ப்பை சுந்தரம் மாஸ்டரால் அவர் தவற விட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, ராசய்யா படத்தை ஆர். கண்ணன் இயக்க, பிரபுதேவா மற்றும் ரோஜா உள்ளிட்டோர் நடித்து படம் பெரிய ஹிட்டாகி இருந்தது.