சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை அனுமதிக்க கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பில் ‘கடவுள் வழிபாட்டில் இரட்டைமுறை என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மற்றும் கடவுள் வழிபாட்டில் ஆணும் பெண்ணும் சமம் மேலும் மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுப்பது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டதின் 14-ஆம் பிரிவை மீறுவதாக உள்ளது’ என்று தீர்ப்பு வழங்கியது
இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் தொடுத்த மறுசீராய்வு மனுவின் தீர்ப்பு நாளை காலை வெளிவரவுள்ளது. இந்த தீர்ப்பு எப்படி இருந்தாலும் பிரச்சனை எழ வாய்ப்பு உள்ளது என்பதால் கேரளா முழுவதும் குறிப்பாக சபரிமலை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
மேலும் தீர்ப்பை ஒட்டியும், சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் அடுத்தவாரம் தொடங்கவுள்ளதை அடுத்தும், சபரிமலை கோவிலில் 10 ஆயிரத்து 17 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கேரள போலீஸ் திட்டமிட்டுள்ளது. நாளை மறுதினம் முதலே பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறை முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிக்க மறுக்கும் விவகாரத்தில் போராட்டங்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும், கேரள போலீஸ் திட்டமிட்டுள்ளது.