சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இருதரப்பினரும் இணைய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால் இதனை இருதரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா? இரண்டு பேரும் இணைந்து அரசியலில் செயலாற்ற முடியுமா? கொள்கை அளவில் அடிப்படையிலேயே மாறுதல் கொண்ட இவர்களால் இணைந்து செயல்பட முடியுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கமல்ஹாசன் ஏற்கனவே அரசியல் கட்சியை ஆரம்பித்து ஒரு தேர்தலையும் சந்தித்து விட்டார். திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்று அவர்கள் பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில் அவர் வாங்கிய ஓட்டுகள் மிகச் சொற்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் சென்னை உள்பட ஒருசில தொகுதிகளை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தனர். விஜயகாந்த் சந்தித்த முதல் தேர்தலில் பெற்ற வாக்குகளில் பாதியை கூட கமல் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெறும் 5% மட்டுமே வாக்குகளை பெற்று அரசியலில் நீடிக்க முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கமலஹாசனுடன் ரஜினிகாந்த் சேர வேண்டுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. மேலும் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்த உடனே அவரது கட்சியில் இணைய பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தயாராக உள்ளனர். அதுமட்டுமின்றி வேறு வழியில்லாமல் அதிமுக மற்றும் திமுகவில் கூட்டணி வைத்திருக்கும் பல கட்சிகள், ரஜினி கட்சியில் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கட்சிகளைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ரஜினி கட்சியுடன் இணைந்து போட்டி போட தயாராக உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. எனவே ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அதிமுக, திமுகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்க வாய்ப்பு இருக்கும் நிலையில் கமல்ஹாசனுடன் இணைந்து அவர் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதப்படுகிறது.
மேலும் கமல்ஹாசனை ஒரு இடத்தில் கூட ரஜினிகாந்த் விமர்சனம் செய்யவில்லை என்பதும் ஆனால் கமலஹாசன் அடிக்கடி ரஜினிகாந்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு ஆளுமையான தலைவர்கள் இல்லாத இந்த நேரத்தில் ரஜினியை ஆளுமையுள்ள தலைவர்களாக அனைவரும் பார்க்கின்றனர். இதற்கு உதாரணமாக ரஜினி ஒரே ஒரு வார்த்தை பேட்டி கொடுத்தால் கூட அந்த ஒரு வார்த்தை ஊடகங்களால் ஒரு வாரம் விவாதம் செய்யப்படுவதை கூறலாம்.
கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கூட ரஜினிகாந்த் தான் ஹீரோவானார் என்பதும் அவர் பேசியது தான் அனைத்து ஊடகங்களிலும் வெளி வந்தது என்பதும், கமலஹாசன் பேசியது ஒரு சில ஊடகங்களில் கூட வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவர் பற்றி ரஜினி கூறிய கருத்துகளும், பாஜகவுக்கு எதிராக கூறிய கருத்துக்களும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது குறித்து அவர் கூறிய கருத்துக்களும் இன்னும் விவாதப் பொருளாக உள்ளது என்பது தெரிந்ததே.
எனவே தேவைப்பட்டால் மட்டுமே இணைவோம் என்று இரு தரப்பிலும் கூறியிருப்பதை பார்க்கும்போது இருவரும் இணைவதற்கு வாய்ப்பில்லை என்று தான் நினைக்க தோன்றுகிறது. கமல் ரஜினி இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னரே கமல் தரப்பில் இருந்த ஸ்ரீபிரியா, கமல்ஹாசன்தான் முதல்வர் என்று கூறி ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டு உள்ளார் என்பதும் இதற்கு பின்னால் நிச்சயம் கமலஹாசன் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் ரசிகர்கள் கிட்டத்தட்ட 75 சதம் பேர் கமலுடன் இணைப்பு வேண்டாம் என்றும், ஆரம்பத்தில் கூறிய படி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறிவருகின்றனர். தனித்து போட்டியிட்டு இரண்டு திராவிட கட்சிகளையும் வீழ்த்துவோம் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி ஒரு முடிவை எடுக்கும் முன் மிக ஆழமாக சிந்தித்து எடுப்பார் என்றும் எனவே அவர் ஏற்கனவே எடுத்த 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முடிவை அவர் மாற்ற மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மொத்தத்தில் கமலஹாசன் ரஜினிகாந்த் இணைப்பு என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி திமுக அதிமுகவுக்கு கிலி ஏற்படுத்த மட்டுமே செய்யும் தந்திரமாக பார்க்கப்படுகிறது. தவிர இருவரும் இணைந்து அரசியலில் செயல்பட வாய்ப்பில்லை என்று விபரம் அறிந்தவர்கள் கூறிவருகின்றனர்.