13 வயசு யுவனை பார்த்து இளையராஜாவுக்கு வந்த ஞானம்.. நம்பர் 1 இசையமைப்பாளாரா மாறுனதுக்கு பின்னாடி இப்டி ஒரு கதையா..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மானைத் தாண்டி மிக முக்கியமான இடத்தை இசையமைப்பாளராக பிடித்துள்ளவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. பின்னணி இசை, பாடல்கள் என அனைத்திலும் கேட்பவர்களின் ஆத்மாவை சேர்த்து இழுக்கும் திறன் படைத்த யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவான பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இடையே சில ஆண்டுகள் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான பாடல்கள் பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அவரது இசையில் வெளியான ஸ்டார், கருடன் உள்ளிட்ட திரைப்படங்கள் அவர் மீதான விமர்சனங்களை தவிடு பொடி ஆக்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படம், ஏழு கடல் ஏழு மலை, மாயவலை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. அப்படி இருக்கையில், பிரபல தயாரிப்பாளரான டி. சிவா, 13 வயதில் யுவன் ஷங்கர் ராஜா சொன்ன வார்த்தையை வியந்தது பார்த்தது பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் டி. சிவா, ஒருமுறை இளையராஜா வீட்டிற்கு சென்ற போது நடந்த சம்பவம் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசுகையில், “இளையராஜா வீட்டில் காத்துக் கொண்டிருந்த போது தான் டவுசர் போட்டுக் கொண்டு ஓடி வந்தார் யுவன் ஷங்கர் ராஜா. அவருக்கு 13 வயது இருக்கும். அப்போது அவரிடம் எங்கே போய் வருகிறீர்கள் என கேட்ட போது, கிரிக்கெட் விளையாடி விட்டு வருவதாக யுவன் கூறினார்.

ஸ்கூல் போவதில்லையா என நான் திரும்ப கேட்டதும் அது எல்லாம் பிடிக்கவில்லை என யுவன் பதில் கூறினார். ‘ஸ்கூலுக்கு எல்லாம் போகாம என்ன பண்ண போறே நீ?’ என்று கேட்டதும் ‘படம் கொடுங்க, ம்யூசிக் பண்றேன்’ என யுவன் தெரிவித்தார். அவர் சீரியஸாகவே பதில் சொல்ல, இளையராஜா வருவதை பார்த்ததும் ஓடி விட்டார்.

அப்போது இளையராஜா என்னிடம், மகன் என்ன கூறினார் என்பது பற்றி கேட்க, நானும் நடந்ததை கூறினேன். அவரும் படத்தை கொடு என கூறியதும், சின்னப்பையன் தெரியாம பேசுகிறான் என நான் பதில் சொன்னேன். ‘நிஜமா சொல்றேன். அவனுக்கு என்ன மியூசிக் தெரியும்னு எனக்கு தெரியாது. ஆனால் அவனை இசையமைப்பாளராக நீ அறிமுகம் செய்து வைத்தால் காலத்திற்கும் நீ அறிமுகம் செய்து வைத்தாய் என்ற பெயர் உனக்கு இருக்கும்’ என்றார்.

அவர் அப்பாவாக அதை பேசவில்லை. ஏதோ ஒரு ஞானத்தில் என்னிடம் சொன்னார். 13 வயதில் யுவனுக்கு இசை பற்றி எந்த அறிவும் இல்லை. அந்த ரத்தம் தான் என்னிடம் பேசியது” என தெரிவித்தார் டி. சிவா. அப்படி யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமான அரவிந்தன் திரைப்படத்தை டி. சிவா தான் பின்னாளில் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.