கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை அபிதா. இவரின் இயற்பெயர் ஜெனிஷா என்பதாகும். இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடரிலும் நடித்து பிரபலமானவர். இளம் வயதிலேயே திரையுலகில் நடிக்க ஆரம்பித்தவர் அபிதா.
இளம் வயதில் திருவொற்றியூரில் தனது வீட்டின் அருகே நடந்த மலையாள தொடரின் ஷூட்டிங்கை பார்க்க சென்ற அபிதாவை அந்த தொடரின் இயக்குனர் கண்டு அபிதாவின் பெற்றோர்களிடம் பேசி அபிதாவை தொடர்களில் நடிக்க வைத்து அறிமுகப்படுத்தினார்.
1997 ஆம் ஆண்டு ‘எட்டுப்பட்டி ராசா’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1998 ஆம் ஆண்டு ‘கோல்மால்’ திரைப்படத்தில் நடித்தார். இருப்பினும் 1999 ஆம் ஆண்டு அபிதா நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ‘சேது’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். சேது திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று விக்ரமுக்கும், அபிதாவிற்கும் திருப்புமுனையாக அமைந்தது.
பின்னர் ‘சீறிவரும் காளை’, ‘பூவே பெண்பூவே’, ‘புதிய அலை’, ‘அரசாட்சி’, ‘நம் நாடு’, ‘என் காதல் தேவதை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் அபிதா. அடுத்ததாக சின்னத்திரை தொடர்களில் கவனத்தை செலுத்தினர் அபிதா. 2007 ஆம் ஆண்டு முதல் 2013 வரை சன் டிவியின் பிரபலமான ‘திருமதி செல்வம்’ தொடரில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் அபிதா. தொடர்ந்து ‘தங்கமான புருஷன்’, ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார் அபிதா.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட அபிதா, தனது திரையுலக அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால், சேது படத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன், அதே போல் திருமதி செல்வம் தொடரில் நடிக்கணும்னு வாய்ப்பு வந்தப்போ கல்யாணம் பண்ணலாம்னு இருந்தேன், இருந்தாலும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நடிச்சேன், ஆனால் என் கேரியரில் இவ்விரண்டும் ஹிட்டானது என்று கூறியுள்ளார் அபிதா.