வெண்ணிலா கபடி குழு படத்த பார்க்க சூரியின் தந்தை செஞ்ச அலப்பறை.. அப்பான்னா இப்படில்ல இருக்கணும்..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் சில காட்சிகள் என்றென்றைக்கும் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும். அந்த வகையில் ஒரு முக்கியமான காட்சி தான் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிகர் சூரி பரோட்டா உண்ணும் காட்சிகள். பந்தயம் வைத்த ஹோட்டல்காரனை அலறவிடும் சூரிக்கு பின்னாளில் பரோட்டா சூரி என்ற பெயரும் வந்து சேர்ந்தது.

இந்த வெண்ணிலா கபடி குழு படம் கொடுத்த ஹிட் காரணமாக தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்த சூரி பெரும்பாலும் காமெடி கதாபாத்திரங்களை தான் ஏற்று நடித்து வந்தார். அப்படி ஒரு சூழலில் தான் இயக்குனர் வெற்றிமாறன் மிகப்பெரிய திருப்புமுனையையும் சூரியின் திரைப் பயணத்தில் ஏற்படுத்தி இருந்தார்.

விடுதலைப் படத்தின் முதல் பாகத்தில் இதுவரை பார்த்திடாத சூரியை ஒரு பிரதான நடிகராக மாற்றி அழகு பார்த்து வெற்றிமாறன், பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டையும் கொடுத்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் காமெடி கதாபாத்திரங்களை தாண்டி தொடர்ந்து குணசித்திரம் மற்றும் முன்னணி நடிகராக நடிக்கும் வாய்ப்பும் சூரிக்கு கிடைத்தது.

அந்த வகையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் சூரிக்கு நல்ல கதாபாத்திரம் இருக்க, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான கருடன் படத்திலும் முன்னணி நடிகராக மாறி இருந்தார். சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்த நிலையில் சூரி இனிமேல் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

அந்த வகையில் விடுதலை 2, கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை என பல திரைப்படங்களிலும் காமெடியை தாண்டி நல்ல கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளதால் இந்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தனது வெண்ணிலா கபடி குழு படம் வெளியான சமயத்தில் தனது தந்தை மதுரையில் உள்ள திரையரங்கத்தில் செய்த அலப்பறை பற்றி சூரி தெரிவித்த கருத்து அதிக கவனம் பெற்று வருகிறது. “வெண்ணிலா கபடி குழு ரிலீஸ் ஆன சமயத்தில் அரைபாடி லாரி முழுக்க ஆட்களை ஏற்றிக்கொண்டு எனது அப்பா பெயர் திரை அரங்கம் சென்று விட்டார்.

லாரியை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து வண்டியை நிப்பாட்ட, ‘My Son Movie’ எனக்கூறி விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு சென்றார். மேலும் உள்ளே அனைவரும் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார் அப்பா. அவர் படம் முடிந்த பின்னர் அனைவருக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்ததுடன் மட்டுமில்லாமல் அடுத்த சோவிற்கு அதிகளவில் இன்னும் நிறைய ஆட்களை ஏற்றி கொண்டு வந்துள்ளார்.

அந்த திரையரங்கில் உள்ளவர்கள் இப்போது பார்த்தாலும் எனது அப்பா செய்த அலப்பறையை கொஞ்சம் கூட தாங்க முடியல என என்னிடம் கூறுவார்கள். லாரி அங்கும் இங்கும் போய்க்கொண்டே இருந்தது என வேடிக்கையாக குறிப்பிடுவார்கள்” என சூரி கூறினார்.