என்னால முடியாது.. படத்தின் முக்கிய காட்சி.. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்னதும் நடிக்க பயந்த ரஜினிகாந்த்..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சில படங்களில் வரும் காட்சிகள் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைந்திருக்கும். சமீபத்தில் வெளியாகி இருந்த திரைப்படங்களில் கூட பல படங்களின் க்ளைமாக்ஸ் மற்றும் இடைவேளை காட்சிகள் உள்ளிட்ட நிறைய விஷயங்கள் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்திருந்தது.

அப்படி இருக்கையில், ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சி ஒன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், அந்த காட்சியில் ரஜினிகாந்த் நடிக்க பயந்தது பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் தற்போது பார்க்கலாம்.

1990 களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமர்சியல் திரைப்படங்களிலும், வெகுஜன மக்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உள்ள திரைப்படங்களிலும் மாறி மாறி நடித்து வந்தார். அந்த வகையில் எமோஷன், சண்டை, ரொமான்ஸ் என அனைத்தும் கலந்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் எஜமான்.

ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும் ரஜினிகாந்துடன் மீனா, நம்பியார், மனோரமா, விஜயகுமார், நெப்போலியன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. காட்சிக்கு காட்சி இந்த படம் பட்டையை கிளப்ப, பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனால், எஜமான் திரைப்படம் பெரிய ஹிட்டாகவும் ரஜினி மகுடத்தில் மாறி இருந்தது. அப்படி இருக்கையில், இந்த படத்தில் வரும் காட்சி ஒன்றிற்கு ரஜினி முதலில் நடிக்க பயந்தது பற்றி தற்போது பார்க்கலாம். இந்த படத்தில் வரும் ஆக்ஷன் காட்சி ஒன்றில் ரஜினி மற்றும் நெப்போலியன் ஆகியோருக்கு மாட்டு வண்டிபந்தயம் நடக்கும்.

இதில் வெற்றி பெறும் நபரே மீனாவை திருமணம் செய்து கொள்ள முடியுமென்ற சூழலில், இதில் ஒரு காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சிறிய சந்துக்குள் மாட்டு வண்டியை செலுத்த வேண்டுமென்ற சூழல் வரும். மேலும் வழியே ஒரு குழந்தை சந்தில் நிற்க, அதனையும் ரஜினி காப்பாற்றி தாயிடம் கொடுக்க வேண்டும்.

இந்த காட்சி விளக்கப்பட்டதும் மாடு மிரண்டு குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என ரஜினி பயந்துள்ளார். ஆனால், சண்டை பயிற்சியாளர் ராக்கி ராஜேஷ் ரஜினிக்கு தைரியம் கொடுத்து அனைத்து இடங்களிலும் நின்று குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்கிறோம் எனக்கூறி உள்ளார். இதன் பின்னரும் சற்று பயத்துடனேயே நடித்துள்ளார் ரஜினி.

ஆனாலும் காட்சி சிறப்பாக வர குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டாராம் ரஜினிகாந்த். மேலும் இந்த காட்சியின் இறுதியில் நெப்போலியன் மாட்டு வண்டியில் இருந்து விழும் காட்சி உண்மையில் நடந்தது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.