தமிழ் சினிமாவின் தல அஜீத் இன்று இருக்கும் உயரம் அவரே பில்லா 2 படத்தில் கூறுவது போல ஒவ்வொரு நொடியும் தானாக செதுக்கியது. மிகப்பெரிய ரசிகர் பலம் உள்ள நடிகர். ஆனால் இன்று வரை தனது ரசிகர்களை தன்னுடைய விளம்பரத்திற்காகவும், புகழுக்காகவும் துளியளவு கூட பயன்படுத்தாமல் சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் என்று அட்வைஸ் செய்து வருபவர் ஆனால் அவரின் மீதுள்ள அலாதி அன்பால் அஜீத்தைக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். இத்தனைக்கும் அஜீத் தனது வாழ்வில் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம்.
அப்படி ஒரு சம்பவம் தான் இது. இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி-யின் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் உன்னைத் தேடி. அஜீத், மாளவிகா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அப்போது சுந்தர் சி வளர்ந்து கொண்டிருந்த இயக்குநராக இருந்தார்.
ஒருமுறை அஜீத்தே சுந்தர் சி-யை நேரில் சந்தித்து நாம் இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று கூற, அப்போது தற்போது காமெடி நடிகராக இருக்கும் சிங்கம்புலி கதை ஒன்றை வைத்திருந்தார். (அஜீத்தை வைத்து சிங்கம்புலி ரெட் படத்தினை இயக்கினார்) இந்தக் கதையை சுந்தர் சி-யிடம் சொல்ல அவரும் ஒப்புக் கொண்டு உன்னைத் தேடி படம் தயாரானது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் சுவிட்சர்லாந்தில் படம்படிக்கப்பட்டது. ஒருமுறை விமானத்தில் பயணம் செய்கையில் சுந்தர் சியிடம் அஜீத் 8 நாட்களுக்குள் படப்பிடிப்பு நடத்தி விடுங்கள். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது உள்ளது. எனவே அந்த அறுவைசிகிச்சைக்குப்பின் எழுந்து நடப்பேனா என்று தெரியாது எனவே சீக்கிரம் எனக்குரிய காட்சிகளை முடித்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அதன்படி ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ஷுட்டிங்கில் நடப்பதற்கே தடுமாறியிருக்கிறார் அஜீத். ரேஸ் விபத்தில் அடிபட்டதால் மூளைக்குச் செல்லும் சிக்னல் நரம்பில் பாதிப்பு ஏற்பட காலைப் பார்த்துப் பார்த்து எட்டு வைத்து நடந்தாராம்.
கே. பாலசந்தர் கொடுத்த கெடு.. ஒரே இரவில் ஒரு படத்தின் மொத்தக் கதையையும் எழுதிய விவேக்..
மேலும் அதன்பின் கேரள சாலக்குடியில் உள்ள அருவியில் ஷுட்டிங் நடைபெற்ற போது தண்ணீர் ஜில்லென இருக்க யூனிட்டே நடு நடுங்கிக் கொண்டே வேலை பார்த்திருக்கிறது. ஆனால் அஜீத் மட்டும் தண்ணீரில் இயல்பாக இருந்தாராம்.
சுந்தர் சி அவரிடம் எப்படி உங்களால் இயல்பாக இருக்க முடிகிறது என்று கேட்க எனக்குத் தான் உணர்வுகளை உணரும் திறன் கிடையாதே அதற்காகத் தான் சிகிச்சை எடுத்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் சுந்தர் சி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இப்படியாக அஜீத் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்த உன்னைத் தேடி படம் வெற்றியைப் பெற்றது.
தன்னுடைய உடல் பாதிப்பையும் பொருட்படுத்தாது தொழில் அவ்வளவு பக்தியாக, மிகுந்த சிரத்தை எடுத்து நடித்துக் கொடுத்திருக்கிறார் அஜீத். அந்த நம்பிக்கையும், மன தைரியமும் தான் இன்று அவரை சூப்பர் ஹீரோவாக மாற்றியிருக்கிறது.