கேப்டன் விஜயகாந்துக்கும், இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனுக்கும் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள். இப்படத்தின் கதையை ஆர்.சுந்தர்ராஜன் ஏ.வி.எம் நிறுவனத்திடம் சொல்ல அவர்கள் பிடித்துப் போய் ஹீரோ யார் என்று கேட்க விஜயகாந்த் பெயரைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஆனால் அவர்கள் வேறு ஒருவரை ஹீரோவாகப் போடலாம் என்று சொல்ல வேண்டாம் சொல்லி வந்துவிட்டார் ஆர்.சுந்தர்ராஜன். அதன்பின் இறுதியில் தூயவன் இந்தப் படத்தினைத் தயாரித்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இளையராஜா கதை கேட்காமலேயே ஏற்கனவே தான் போட்டு வைத்திருந்த சில மெட்டுக்களை அப்படியே வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு பயன்படுத்த பாடல்களும் ஓஹோவென ஹிட் ஆனது.
1984-ல் வெளியான இப்படத்தில் விஜயகாந்துடன் ரேவதி மற்றும் வைதேகியாக பரிமளம் ஜோஷாய் நடித்திருந்தனர். இதில் பரிமளம் ஜோஷாய் சில காட்சிகளே வந்தாலும் அவருக்காகத் தான் படமே. மொத்த படமும் அவரைச் சுற்றியே வரும். டைட்டில் கூட வைதேகி என இருக்கும்.
நடிகை பரிமளம் ஜோஷாய் அடிப்படையில் கன்னட சினிமாத் துறையைச் சேர்ந்தவர். கன்னடத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வைதேகி காந்திருந்தாள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பரிமளம் ஜோஷாயின் மகள் தான் நடிகை மேக்னா ராஜ். ஆக்சன் கிங் அர்ஜுனின் நெருங்கிய உறவினர்.
வீட்டு வாசலிலேயே குடைபிடித்து காத்திருந்த எம்.என்.நம்பியார்.. இப்படி ஒரு தொழில் பக்தியா?
வைதேகி காத்திருந்தாள் பட அனுபவம் பற்றி பரிமளம் கூறும் போது, “படம் வெளியாகி 40 வருடங்களாகி விட்டது. இன்றும் என்னை அடையாளம் கண்டு வைதேகி என அழைக்கின்றனர். இப்படத்தில் ராசாவே உன்னை.. பாடலில் அருவியில் ஷுட்டிங் நடத்தினார்கள். ஆனால் எனக்கு நீச்சல் தெரியாது. அருவியில் ஷுட்டிங் நடக்கும் போது சறுக்கும் காட்சியில் பள்ளத்தில் விழுந்துவிட்டேன்.
பின் படக்குழுவினர் காப்பாற்றினார்கள். ஒருமுறை கேப்டன் விஜயகாந்தை வேறொரு படத்தின் ஷுட்டிங்கில் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அவர் எழுந்து நின்று வரவேற்றார். நான் அப்போது பிரபலமான நடிகை கூட கிடையாது. அந்த அளவிற்கு மனிதர்கள்மேல் மரியாதை கொடுப்பார். மேலும் அவர் மனைவியும் என்னிடத்தில் வைதேகி காத்திருந்தாள் படத்தை 100 முறையாவது பார்த்திருப்பேன் என்று கூறினார்.” இவ்வாறு அவர் கூறினார்.
அந்த வைதேகி இப்போது வயது கூடினாலும் அதே முகப் பொலிவுடன் கன்னட சினிமா உலகில் நடித்து வருகிறார்.