வீட்டு வாசலிலேயே குடைபிடித்து காத்திருந்த எம்.என்.நம்பியார்.. இப்படி ஒரு தொழில் பக்தியா?

By John A

Published:

இப்பொழுதெல்லாம் ஒரு படம் நடித்துவிட்டு ஹிட் கொடுத்துவிட்டாலே நினைத்த நேரத்தில் ஷுட்டிங் வருவதும், பந்தா செய்வதும், சம்பளத்தினை பல மடங்கு உயர்த்தியும், யூடியூப் சேனல்களில் பேட்டிகளை குவித்துத் தள்ளும் இளைய நடிகர்களுக்கு மத்தியில் அந்தக் கால நடிகர்கள் ஒரு படம் புக் ஆகி விட்டால் இயக்குநரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அந்தப் படத்தில் ஒரு பள்ளி மாணவனைப் போல் நடித்துக் கொடுத்துவிட்டுதான் அடுத்த படத்திற்கே செல்வார்கள். அவ்வளவு தூரம் தொழில் பக்தி இருந்தது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் எம்.என்.நம்பியார்.

தமிழ் சினிமாவில் பி.எஸ்.வீரப்பாவிற்குப் பிறகு வில்லன் கதபாத்திரத்தில் நடுங்க வைத்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் சரிக்குச் சரி சண்டையிட்டு அந்தக் கால ரசிகர்களை பயமுறுத்தியவர் எம்.என். நம்பியார். ஆனால் நிஜத்தில் அவ்வளவு ஒரு மென்மையான மனிதர். பூவுக்குள் ஒரு புயல் என்பது போல நடிப்பு என்று வந்துவிட்டால் கைகளைப் பிசைந்து அவர் லுக் விடும் காட்சிக்கு தியேட்டரே நடுங்கும். அதன்பின் வயது ஏற ஏற முதிர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இனி உன்னை வச்சு நான் டைரக்சன் பண்ணல.. சிம்புவை தன் வழிக்கு வர வைத்த கே.எஸ்.ரவிக்குமார்..

இப்படி எம்.என்.நம்பியாரும், எம்.என்.ராஜமும் இணைந்து நடித்த படம்தான் வின்னர். பிரசாந்த், வடிவேலு கூட்டணியுடன் இவர்கள் கூட்டணியும் நம்மை ரசிக்க வைக்கும். வின்னர் படம் நடித்துக் கொண்டிருந்த போது எம்.என்.நம்பியாருக்கு வயதும் அதிகம். எனவே வயோதிக நோய்களால் அவதிப்பட்டிருக்கிறார். ஏற்கனவே வின்னர் திரைப்படம் சில தயாரிப்பு சிக்கல்களால் தள்ளாடியபடி தான் திரைக்கே வந்திருக்கிறது.

இந்நிலையில் அந்தப் படத்தில் நடித்த நம்பியாருக்கு சம்பளம் செட்டில் செய்யவேண்டியிருந்தது. மேலும் நம்பியாரின் டப்பிங் பணிகளும் நிறைவடையாமல் இருந்தது. அதன்படி தயாரிப்பாளர் நம்பியாரைச் சந்தித்து சம்பள பாக்கியையும் கொடுத்துவிட்டு டப்பிங் தியேட்டருக்கு வருமாறு கூறியிருக்கிறார்.

ஆனால் அப்போது நம்பியார் ஊட்டிக்கு ஓய்வெடுக்கச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தார். இதனிடையே தயாரிப்பாளர் கொண்டு வந்த அந்தப் பணத்தினை வாங்காமல் ஊட்டியிலிருந்து வந்த பின் டப்பிங் முடித்துவிட்டு மீதச் சம்பளத்தை வாங்கிக் கொள்வதாகக் கூற, தயாரிப்பாளரோ நீங்கள் வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என்கிறீர்கள் எனவே உங்கள் பணிகளை முடித்து விட்டால் படத்தினை ரிலீஸ்-க்கு தயார் செய்து விடுவோம் என்று கூற, நம்பியார் உடனே ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார்.

வேண்டாம் என்று சொன்ன தமிழ் சினிமாவின் முதல் தேசிய விருதுப் பாடல்.. சாதித்தது எப்படி தெரியுமா?

எனக்கு மாலை வேளையில் சரியாகக் கண் தெரியாது. நீங்கள் மாலை 4 மணிக்கு கார் அனுப்புங்கள். நான் டப்பிங் முடித்துவிட்டு 6 மணிக்கு வீட்டுக்கு வந்துவிட்டு நாளை புறப்பட்டுக் கொள்கிறேன். தாமதிக்க வேண்டாம் என்று கூறி பணத்தையும் வாங்கிக் கொண்டார். இதனிடையே தயாரிப்பாளர் அலுவலகத்தில் சொல்லி 4 மணிக்கு நம்பியார் வீட்டுக்கு கார் அனுப்பும்படி கூறியிருக்கிறார். ஆனால் அலுவலகத்தில் மறந்துவிட்டனர். மீண்டும் தயாரிப்பாளர் கார் அனுப்பியாச்சா என்று கேட்க, மறந்த செய்தியைக் கூற, உடனே அவரே மீண்டும் நம்பியார் இல்லம் சென்று பார்த்த போது மணி 5.30-ஐ தாண்டியிருந்தது.

அப்போது நம்பியார் வீட்டு வாசலிலேயே காருக்காக மாலை 4 மணியிலிருந்து குடைபிடித்த படியே காத்துக் கொண்டிருந்தாராம். இதனைப் பார்த்த தயாரிப்பாளர் மெய்சிலிர்த்துப் போய் அதன்பிறகு அவரை டப்பிங் தியேட்டருக்கு அழைத்துச் சென்று பணிகளை முடித்த பின் மாலை 7 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பணம் வாங்கி விட்டோமே சொன்ன சொல்லை மீறக் கூடாது என்பதற்காக தனது தொழிலில் அவ்வளவு சுத்தமாக இருந்திருக்கிறார் நம்பியார்.