சாமி 2003 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி வெளியான ஆக்க்ஷன் திரைப்படமாகும். கவிதாலயா ப்ரொடெக்ஷன்ஸ் பேனரின் கீழ் புஷ்பா கந்தசாமி தயாரித்து இயக்குனர் ஹரி இயக்கி கே. பாலசந்தர் இத்திரைப்படத்தை வழங்கினார்.
இப்படத்தின் நாயகனாக விக்ரம், நாயகியாக த்ரிஷா நடித்துள்ளனர். விவேக், ரமேஷ் கண்ணா, விஜயகுமார், கோட்டா ஸ்ரீனிவாச ராவ், மனோரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வி. டி. விஜயன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை செய்துள்ளார்.
போலீஸ் அதிகாரியாக விக்ரம் இப்படத்தில் நடித்திருப்பார். திருநெல்வேலி நகரில் ரவுடிகள் நடத்தும் அட்டகாசத்தை போலீஸ் அதிகாரியாக நாயகன் எப்படி கையாளுகிறார், ரவுடிகளை எப்படி அடக்குகிறார் என்பது கதை. பொதுவாக இயக்குனர் ஹரி தன் படத்தின் கதையை தென் தமிழ்நாடு மாவட்டங்களை சுற்றியே அமைத்திருப்பார். வீர வசனங்கள், அரிவாள் போன்றவை இவர் படத்தில் முக்கியமானவை. அதே சாயலில் தான் ‘சாமி’ திரைப்படத்தை இயக்கியிருப்பார்.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. நடிகர் விக்ரமின் கேரியரில் இப்படம் முக்கியமான இடத்தைப் பிடித்தது. படத்தின் பாடல்களும், வசனங்களும் கூட ஹிட் தான். அந்த நேரத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார் த்ரிஷா. இப்படத்தின் தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியான சாமி ஸ்குயர் எதிர்பார்த்த அளவுக்கு பேசப்படவில்லை. சாமி ஸ்குயரில் நாயகனாக விக்ரமும் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ‘சாமி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மறுபடியும் இத்திரைப்படத்தை ரீ- ரிலீஸ் செய்தாலும் கூட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளும் என்று சொன்னால் மிகையாகாது.