தேனிசை தென்றல் தேவா தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ் சினிமா கானா பாடல்களின் அரசன் என்று கூட சொல்லலாம். பல கானா பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியும் உள்ளார். மேற்கத்திய இசையை முறையாக கற்றவர். இருபது வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் பணியாற்றியவர்.
1989 ஆம் ஆண்டு ‘மனசுக்கேத்த மகராசா’ திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தேவா. 1990 ஆம் ஆண்டு ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்திற்கு இசையமைத்தார். இரண்டாவது படமே வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசின் மாநில விருதை வென்றார்.
தொடர்ந்து ‘நம்ம ஊரு பூவாத்தா’ ‘அண்ணாமலை’, ‘ஊர் மரியாதை’, ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’, ‘கட்டபொம்மன்’, ‘செந்தூரப்பாண்டி’, ‘என் ஆசை மச்சான்’, ‘ஆசை’, ‘பாட்ஷா’, ‘திருமூர்த்தி’, ‘காதல் கோட்டை’, ‘அருணாச்சலம்’, ‘காலமெல்லாம் காதல் வாழ்க’, ‘நட்புக்காக’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘குஷி’, .முகவரி’ போன்ற பல வெற்றித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் உருவாக்கிய பாடல்களில் பெரும்பாலானவை ஹிட்டானது.
தேவா அவர்களின் மகன் ஸ்ரீகாந்த தேவா. இவரும் தமிழ் திரைப்பட இசையமையாளர் ஆவார். தமிழில் 80 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ‘கருவறை’ என்ற குறும்படத்திற்கு இசையமைத்ததற்காக இந்திய அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றார்.
இதைப் பற்றி பேசிய தேவா அவர்கள், எனது மகன் தேசிய விருதை வென்றப் பிறகு, ஸ்ரீகாந்த்திடம் விருதுடன் இருக்கும் போட்டோவை ஸ்டுடியோவில் மாட்டி வை என்று சொன்னேன். ஆனால் அவர் என் அப்பாவிற்கு கிடைக்காத விருது எனக்கு பெரிதல்ல என்று கூறி, போட்டோவை மாட்டாமல் வைத்திருக்கிறார் என்று தனது மகன் ஸ்ரீகாந்த் தேவா பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் தேனிசை தென்றல் தேவா.