பா. ரஞ்சித் தமிழ் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார். 2012 ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
அடுத்ததாக மெட்ராஸ் (2014), கபாலி (2015), காலா (2018), சார்பட்டா பரம்பரை (2021) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தனது நீலம் புரொடெக்ஷன்ஸ் கீழ் பரியேறும் பெருமாள் (2018), இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு (2019), ரைட்டர் (2021) போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
பா. ரஞ்சித் தயாரிப்பில் மிக நல்ல விமர்சனங்களைப் பெற்றத் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் பத்து வருடங்களுக்கு மேல் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ்.
பா. ரஞ்சித் தயாரித்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தின் மூலமாக தான் மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமானார். ஒடுக்கப்பட்ட பின்தங்கிய சாதி ரீதியான சமுதாயம் என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை உணர்ச்சிகரமாக எடுத்துக் காட்டுபவர் மாரி செல்வராஜ்.
பரியேறும் பெருமாள் படத்திலும் குறிப்பிட்ட சாதியால் பின்தங்கிய மாணவனை என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை வெளிப்படையாக காட்டியிருப்பார் மாரி செல்வராஜ். இவரது படங்கள் பார்ப்போரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும். இப்படத்தின் நாயகனாக கதிரின் நடிப்பு அபாரமாக இருக்கும். நாயகியாக கயல் ஆனந்தி, நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். ஒட்டுமொத்தத்தில் நல்ல விமர்சனங்களைப் பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.