கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு தெய்வம் தந்த பூவே.. பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான சின்மயி தனது முதல் பாட்டிலேயே சிறந்த பின்னனிப் பாடலுக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார். தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்களைப் பாடினார். ஆனால் இவர் பாடிய ஒரு பாடலை இயக்குநர் பாண்டிராஜன் நிராகரித்து அதனை இசையமைப்பளார் ஜேம்ஸ் வசந்தன் ஸ்ரேயா கோஷலைப் வைத்துப் பாட வைத்திருக்கிறார்.
சசிக்குமார் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜன் அறிமுகமான முதல் திரைப்படம் தான் பசங்க. 2009-ல் வெளியான இந்தத் திரைப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றது. குழந்தைகளை வைத்து மையமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் தான் விமல் ஹீரோவாகவும், வேகா ஹீரோயினாகவும் அறிமுகமானார்கள். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் பூக்கும் தருணத்தில் வரும் பாடல் தான் ஒரு வெட்கம் வருதே வருதே.. பாடல். சிறு சாரல் மழையில் பாடல் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும்.
தாமரை எழுதிய இப்பாடலுக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். இந்தப் பாடலை முதலில் நரேஷ் ஐயரும், சின்மயியும் பாடியிருந்தனர். பாடலைக் கேட்ட இயக்குநர் பாண்டிராஜனுக்கு சின்மயியின் குரல் ஏனோ சில இடங்களில் திருப்தி இல்லாமல் இருந்தது. இதனையடுத்து ஸ்ரேயா கோஷலை பாட வைத்திருக்கின்றனர். அதன்பின் பாண்டிராஜனுக்கு திருப்தி ஏற்பட்டது. இந்தப் பாடல் சிறந்த மெலடிப் பாடலாக விளங்குகிறது.
இந்தியாவிலேயே பின்னனிப் பாடகர்களில் அதிக சம்பளம் வாங்கும் ஸ்ரேயா கோஷலின் தமிழ் உச்சரிப்பு இந்தப் பாடலில் தெளிவாகவும், கணீரெனவும் ஒலிக்கும். இயல்பாகவே பிற மொழிகள் கலவாது தமிழ்ச் சொற்களை வைத்தே பாடல் இயற்றும் தாமரையின் பாடலை வங்காளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஸ்ரேயா கோஷல் தமிழ்ப் பாடகர்களைப் போலவே அச்சுப் பிசராமல் பாடியிருப்பார். மேலும் இமானின் இசையில் பெரும்பாலான பாடல்களையும் ஸ்ரேயா கோஷல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.