லீக் மேட்ச்ல விமர்சனம் பண்ணாங்க.. ஆனா இப்ப.. எந்த மும்பை, சிஎஸ்கே வீரரும் செய்யாததை பிளே ஆப்பில் செய்து முடித்த ஸ்டார்க்..

By Ajith V

Published:

கடந்த 16 ஐபிஎல் சீசன்களில் பலமுறை ஏலம் நடந்த பின்னரும் எந்த ஒரு வீரரும் இருபது கோடி ரூபாயை தொடவே இல்லை. ஆனால் நடப்பு ஐபிஎல் சீசனுக்கு முன்பாக நடந்த மினி ஏலத்தில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் 20 கோடி ரூபாயை தாண்டி வரலாறு படைத்திருந்தனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்திருந்த பேட் கம்மின்ஸை 20 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.

இதே போல மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இப்படி ஒரு தொகைக்கு ஏலம் போனது அதிக விமர்சனத்தை சந்தித்திருந்த நிலையில் ஐபிஎல் ஆரம்பத்தில் ஸ்டார்க்கின் பந்துவீச்சு பெரிய அளவில் கேள்விக்குறியாகவும் இருந்து வந்தது. அவர் பெரும்பாலும் நான்கு ஓவர்கள் பந்து வீசி 40 முதல் 50 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகளை எடுப்பதிலும் தடுமாறி வந்தார்.

ஆனால் அதே வேளையில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக மாறிய பேட் கம்மின்ஸ் மிகச் சிறப்பாக தனது அணியை வழிநடத்தி பல போட்டிகளில் வெற்றியை தேடி கொடுத்திருந்தார். இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த நிலையில் மறுபுறம் ஸ்டார்க்கின் பந்துவீச்சு லீக் போட்டிகளில் பெரிய அளவில் விமர்சனத்தை தான் சந்தித்திருந்தது.

ஆனால் பிளே ஆப் போட்டியில் முன்னேறியதற்கு பின்னர் ஸ்டார்க்கின் பந்துவீச்சு மிக அபாரமாகவும் இருந்து வந்தது. ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் முதல் ஓவரிலேயே ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தி அதிர வைத்திருந்தார் ஸ்டார்க். அதுமட்டுமில்லாமல் நிதிஷ் ரெட்டி மற்றும் சபாஷ் அகமது ஆகியோரின் விக்கெட்டுகளையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அசத்தியிருந்த ஸ்டார்க் கொல்கத்தா நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறவும் முக்கிய காரணமாக இருந்தார்.

இதனை தொடர்ந்து இறுதிப் போட்டியிலும் ஹைதராபாத் அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஸ்டார்க், முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மாவின் விக்கெட் வீழ்த்தியதுடன் மட்டுமில்லாமல் திரிபாதியின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆரம்பத்திலேயே ஹைதராபாத் அணிக்கு குடைச்சல் கொடுத்திருந்தார்.

3 ஓவர்கள் பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த ஸ்டார்க், இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார். அத்துடன் தனது பந்துவீச்சுக்காகவும் இந்த இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றிருந்த ஸ்டார்க், தன் மீதான விமர்சனங்கள் அனைத்தையும் உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டார் என்றே சொல்லலாம்.

நாக் அவுட் போட்டிகள் என்று வந்துவிட்டாலே ஸ்டார்க் தனி விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஆடிய ஐபிஎல் தொடரிலும் பிரதிபலித்திருந்தது. இந்நிலையில் தான் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் போட்டிகளில் பலமுறை ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணியின் வீரர்கள் கூட செய்யாத ஒரு சாதனையை முதல் முறையாக செய்து அசத்தியுள்ளார் ஸ்டார்க்.

அதாவது ஒரே ஐபிஎல் சீசனில் குவாலிஃபயர் அல்லது நாக் அவுட் போட்டிகளில் இரண்டு முறை ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரராகவும் ஐபிஎல் வரலாற்றில் மாறி உள்ளார் மிட்செல் ஸ்டார்க். இதனால் அவர் 20 கோடிக்கு மேல் வாங்கப்பட்டது ஒரு நல்ல முடிவு தான் என்றும் பலர் தற்போது பாராட்டியும் வருகின்றனர்.