இளைய தளபதி என்ற பட்டத்தினைத் துறந்து தளபதி விஜய் என்று முதன் முதலில் டைட்டில் போடப்பட்டு விஜய் நடிப்பில் வெளிவந்த படம்தான் தலைவா. தலைவா படத்தில் அமலாபால் விஜய்யிடம் தனக்குத் திருமணமாகிவிட்டது. கணவர் பெயர் சாம் ஆண்டர்சன் என்று கூறும் அந்தக் காமெடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
பதிலுக்கு விஜய் உண்மையாகவே சாம் ஆண்டர்சன் என்னும் நடிகரை வரவழைத்து ராசாத்தி.. என் ஆச ராசாத்தி பாடலை அமலா பாலுடன் ஆட வைப்பார். அதற்கு முன்பாக இவர் சாம் ஆண்டர்சன் என்றொரு நடிகர் இருக்கிறாரே என்றே தெரியாத நிலையில் தலைவா படம் இவருக்கு நல்ல அடையாளத்தினைக் கொடுத்தது.
உடனே நம்மவர்கள் ராசாத்தி பாடலை கூகுளில் தேடிப் பார்க்க சாம் ஆண்டர்சனின் வரலாறே கொட்டியிருக்கிறது. ஆம் ஈரோட்டில் பிறந்த சாமுவேல் ஆண்டர்சன், தனது மாமா ஒரு படம் தயாரிக்க விரும்பிய போது அதில் ஹீரோவாக யாரைப் போடலாம் என யோசிக்க சாமுவேல் ஆண்டர்சனை ஹீரோவாக்கி 2007-ல் யாருக்கு யாரோ என்ற படத்தினை எடுத்திருக்கிறார்கள்.
இந்தப் படம் வந்ததும் தெரியாது. போதும் தெரியாது. ஆனால் கவனிக்க வைத்தது. எப்போது தெரியுமா? கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் தலைவா படத்தில் ராசாத்தி என் ஆச ராசாத்தி பாடல் இடம்பெற்ற போது இது நம்ம விஜய் பாட்டு இல்லையே எனத் தேட ‘யாருக்கு யாரோ‘ படத்தில் இந்தப் பாட்டு இடம் பெற்றுள்ளது.
பிரௌசிங் சென்டருக்கு வந்த இளைஞர்.. காதலர் தினம் படத்தின் ஹீரோவாக மாற்றிய இயக்குநர் கதிர்
இந்தப் பாட்டின் ஹைலைட்டே நடனம் தான். இந்த நடனம் பற்றி அவர் கூறுகையில், “இந்தப் பாட்டு படப்பிடிப்பின் போது அப்போதுதான் உணவருந்தி இருந்ததால் உடனடியாக நடனம் ஆட வைத்தார்கள். மேலும் எனக்கு எந்த அசைவுகளும் வரவில்லை. ஒருவழியாக சிறிய நடன அசைவுகளைக் கற்றுக் கொடுத்து நடிக்க வைத்தார்கள்” என்று கூறியிருக்கிறார் சாம் ஆண்டர்சன்.
இந்தப் பாடலைப் பார்த்தால் முதல் படம் என்பதாலும், நடிப்பு, நடனம் என்பது சுத்தமாகத் தெரியாததாலும் ஒரு கிரிஞ்ச் பாடலாக அமைந்துள்ளது. ஆனால் அந்த கிரிஞ்சே பின்னாளில் இவருக்கு புகழைத் தேடிக் கொடுக்க அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சாம் ஆண்டர்சன். இன்று சில படங்களில் சிறப்புத் தோற்றத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் சாம் ஆண்டர்சன் சொந்த ஊரில் கூரியர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.