இயக்குநர் மணிரத்னம் கடைசியாக இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்து சூப்பர் ஹிட் பாடல்களையும், சூப்பர் ஸ்டார் ரஜினியை ஆரவாரமில்லாத அமைதியா நடிக்க வைத்தும், அர்விந்த் சாமியை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்திய திரைப்படம் தான் தளபதி. மகபாரதக் கதையில் வரும் கர்ணன், துரியோதனன் நட்பினைத் தழுவி திரை மசாலா தூவி, அதில் காதலையும், அம்மா பாசத்தையும் கலந்து கொடுத்த படம் தான் தளபதி.
தேவாவாக (துரியோதனன்) மம்முட்டி, சூர்யவாக (கர்ணன்) ரஜினி ஆகியோர் திரைமொழியில் மாயாஜாலம் நிகழ்த்தியிருப்பார்கள். பொதுவாக மணிரத்னம் படங்களில் பல மறைமுக குறியீடுகள் காட்டப்பட்டிருக்கும். உற்று நோக்கினால் மட்டுமே இது ஏன் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிக்குப்பின்னால், அந்தக் குறியீடுகளின் பின்னால் உள்ள உண்மை புலப்படும்.
அப்படி தளபதி படத்தில் மணிரத்னம் வைத்துள்ள குறியீடுதான் சூரியன். தளபதி படத்தின் பெரும்பாலான காட்சிகளைக் கவனித்துப் பார்த்தால் சூரியன் உதயம் அல்லது அஸ்தனமனம் காட்டப்பட்டிருக்கும். இந்திய சினிமாவின் லிஜெண்ட் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது கேமராக் கண்களில் சூரியனுக்குப்பின்னால் ரஜினி வரும் காட்சிகளை தத்ரூபமாகப் படம்பிடித்திருப்பார்.
தனியாக இசையமைக்கச் சென்ற கங்கை அமரன்..அப்போது இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?
குறிப்பாக ஷோபானா-ரஜினி அறிமுகக் காட்சி, யமுனை ஆற்றிலே பாடல் காட்சி, ஷோபானா – ரஜினி பிரியும் காட்சி, ஸ்ரீவித்யா- ரஜினி சந்திக்கும் காட்சி, ரஜினி குழந்தையாக ரயிலில் வரும் காட்சி போன்றவற்றில் பின்னனியில் சூரியனே காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கும். இங்குதான் மணிரத்னத்தின் திறமையே புலப்படுகிறது. மகாபாரதத் கதைப்படி கர்ணனின் தந்தை சூரிய பகவான். எனவே கர்ணனான ரஜினி எங்கெங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் தந்தை சூரியபகவானை ஞாபகப்படுத்தும் வகையில் மணிரத்னம் காட்சிகளை அமைத்திருப்பார்.
அதற்கு சந்தோஷ் சிவன் உயிர்கொடுத்து அதிகாலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் போன்ற காட்சிகளில் கேமராவில் மிரட்டியிருப்பார். பெரும்பாலும் சூரிய வெளிச்சம் கதைக்கு கூடுதல் உயிர்கொடுக்கும் என்பதாலும், மேலும் தளபதியில் கதையே சூரியபகவானின் மைந்ததனான கர்ணனைப் பற்றியதாலும் படத்தில் நிறைய காட்சிகள் சூரிய ஒளியின் பின்னனியில் எடுக்கப்பட்டிருக்கும்.