பங்காளிங்கனா இப்டி இருக்கணும்.. 3 ஐபிஎல் சீசனில் மும்பை, சிஎஸ்கேவுக்கு உள்ள சூப்பரான ஒற்றுமை..

By Ajith V

Published:

ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே உடனடியாக ஞாபகத்திற்கு வரும் அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தான். அந்த அளவுக்கு இந்த 3 அணிகளுமே ஐபிஎல் தொடரில் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், இதில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

ஆனால், ஆர்சிபி அணி ஒரு சில முறை இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தாலும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதே வேளையில், இந்த முறை பல தடைகளை கடந்து அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளனர். 8 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த ஆர்சிபி அணிக்கு அவர்களின் பிளே ஆப் வாய்ப்பே ஒரு சதவீதத்திற்கும் குறைவாக தான் இருந்தது.

அப்படி இருக்கையில், அடுத்த ஆறு போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று 10 வது இடத்தில் இருந்து தற்போது 4 வது இடத்திற்கு முன்னேறியதுடன் பிளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளனர். ஆர்சிபி உள்ளே நுழைந்ததால் அவர்களை போல 14 புள்ளிகள் பெற்றிருந்த சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.

இதில் சிஎஸ்கே அணி, ஆர்சிபிக்கு எதிராக பிளே ஆப்பிற்கு தகுதி பெறும் 10 ரன்களை அடிக்க முடியாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. முன்னதாக பலரும் சிஎஸ்கே அணி இந்த முறை கணித்து வந்த நிலையில், அது ஏமாற்றத்திலும் முடிந்துள்ளது. சிஎஸ்கேவை போல பலம் வாய்ந்த அணியாக விளங்கி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த 4 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை.

அதிலும் கடந்த 2022 ஆம் ஆண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறி இருந்த மும்பை இந்தியன்ஸ், இந்த சீசனிலும் 4 வெற்றிகளை மட்டும் பெற்று கடைசி இடத்தை மீண்டும் ஒரு முறை பிடித்துள்ளனர். முன்னதாக, அவர்கள் 12 லீக் போட்டிகள் ஆடி முடித்த போதே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்து விட்டிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 3 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் பங்காளிகளை போல சேர்ந்து செய்த விஷயத்தை பற்றி தற்போது பார்க்கலாம். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னை அணி 9 வது இடத்தையும், மும்பை 10 வது இடத்தையும் பிடித்து ஒன்றாக வெளியேறி இருந்தது. இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு இரு அணிகளும் பிளே ஆப் சுற்றிற்கு முன்னேற சிஎஸ்கே கோப்பையை கைப்பற்றி இருந்தது.

தொடர்ந்து, இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் வாய்ப்பை இழந்தாலும், சிஎஸ்கே உள்ளே நுழைந்து விடும் என கருதப்படது. ஆனால் அவர்களும் தற்போது வெளியேற, கடந்த 3 சீசனிலும் இந்த 2 அணிகள் அனைத்தையும் சேர்ந்தே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.