பிளே ஆப் முன்னேறும் அணிகளில் மூன்று அணிகள் யார் என்பது உறுதியாக தெரிய வந்துள்ள அதே வேளையில், நான்காவது அணிக்கான போட்டி மட்டும் இன்னும் முடியாமலே உள்ளது. பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறினாலும் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளும் கூட பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டது என்றே சொல்லலாம்.
டெல்லி அணிக்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லாத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதம் உள்ளது. அதில் லக்னோ வெற்றி பெற்றாலும் கூட அவர்களின் ரன் ரேட் மிக மிக குறைவாக இருப்பதால் பிளே ஆப் வாய்ப்பு என்பது எட்டாக்கனி தான்.
ஆனால், அதே வேளையில், பிளே ஆப் சுற்றிற்கு 4 வது அணியாக முன்னேறும் வாய்ப்பு இரண்டு அணிகளுக்கு தான் அதிகம் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டி, சின்னசாமி மைதானத்தில் நாளை (மே 18) நடைபெற உள்ளது.
ஒரு பக்கம் சென்னை அணி 14 புள்ளிகளுடனும், இன்னொரு ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், சிஎஸ்கே இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவர்கள் 4 வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடுவார்கள். ஆனால், அதே வேளையில் ஆர்சிபி இந்த போட்டியில் வென்றாலும் கூட, அவர்கள் சிஎஸ்கேவை குறிப்பிட்ட ரன்கள் அல்லது ஓவர்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
அப்படி நடந்தால் யாரும் நம்ப முடியாத வகையில், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுடன் 4 வது அணியாக ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இப்படி ஒரே போட்டியில் பல ட்விஸ்ட்கள் காத்து கொண்டிருப்பதால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிய இன்னும் ஒரு நாள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனிடையே, சிஎஸ்கே ஒரு வேளை இந்த போட்டியில் வெற்றி பெற்று அவர்கள் 2 வது இடத்திற்கு முன்னேற வேண்டும் என்றால் என்ன நடக்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்த வேண்டும். இதே போல, ராஜஸ்தான் அணியை கொல்கத்தா அணி வீழ்த்த வேண்டும்.
ஆர்சிபியை சிஎஸ்கே வீழ்த்தி மேற்குறிப்பிட்ட விஷயங்கள் நடந்தால், 2 வது இடத்திற்கு சிஎஸ்கே முன்னேறுவதுடன் குவாலிஃபயர் 1 போட்டியை கொல்கத்தா அணிக்கு எதிராக அவர்கள் ஆடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.