சமீபத்தில் தமிழ்த்திரையுலகின் தந்தை டி.ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் என்ன பேசினார் என்று பார்ப்போம்.
அந்த ஏழு நாட்கள் படம் எடுத்த போது தயாரிப்பாளர்கள் நாச்சியப்பன், ஜெயராமன் என 2 பேர் என்னை டி.ஆரிடம் அறிமுகப்படுத்தினாங்க. சொன்ன வார்த்தையைக் காப்பாத்தணும்கறதுக்காக அந்த 2 பேருக்கும் நான் படம் எடுக்குறேன்னு சொன்னேன்.
‘வாக்கு கொடுக்கறது பெரிசு இல்ல. செய்ய முடிஞ்சா கொடுக்கணும். இல்லன்னா முடிஞ்ச அளவு வாக்கைக் காப்பாற்றுறேன்னு ஒரு வார்த்தையைப் போடணும்’னு டி.ஆர்.அப்பவே எனக்கு சொல்லிக் கொடுத்தாரு.
அந்த நேரத்துல ஒரு பெரிய புரொடியூசர் ஒரே பேமெண்ட் எனக்குப் படம் பண்ணுங்கன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாரு. ஆனா நான் வாக்கு கொடுத்துட்டேன்னு சொல்லி அவங்களை மறுத்துட்டேன். அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னா நாச்சியப்பன், ஜெயராமன் 2 பேரும் ‘முதல்ல நீங்க அந்த புரொடியூசருக்குப் படம் பண்ணுங்க.
அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்’னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு ஏதோ முக்கியமான வேலை வந்துட்டு. அப்ப தான் எனக்கு டிஆர். சொன்னது நினைவுக்கு வந்தது.
வாக்குக் கொடுக்கறது பெரிசு இல்ல. நம்ம அதைக் காப்பாத்தணும்னு நினைக்கும்போது நம்மையும் அறியாமல் ஒரு சூழல் வந்து அதை மாற்றிடும். அதே மாதிரி ஏவிஎம்ல முதல் 2 படம் செய்யும் போது கங்கை அமரன், விஸ்வநாதன் எல்லாம் இருந்தாரு. அப்போ ‘என்னண்ணே என்னை விட்டுட்டீங்களே’ன்னாரு கங்கை அமரன்.
‘அடுத்து பெரிய படம் வந்தால் தாரேன்’னு அமரன் கிட்ட சொன்னேன். அப்புறம் ஏவிஎம் படம் முந்தானை முடிச்சு வாய்ப்பு வந்தது. அதுக்கு அமரனுக்கு வாய்ப்பு கொடுத்துட்டேன். ஏவிஎம் எவ்வளோ சொல்லிப் பார்த்தாங்க.
இளையராஜா இதுக்கு மியூசிக் பண்ணட்டும். அந்தக் கதைக்கு அவர் போட்டா ரொம்ப நல்லாருக்கும்னு சொன்னாங்க. இல்ல அமருக்கு வாக்குக் கொடுத்துட்டேன்னு மறுத்தேன். அப்புறம் அமர் வந்தாரு. ‘சரவணன் சார் எல்லாம் வந்து என்னைக் கூப்பிட்டு எனக்கு 2 படம் கொடுக்குறேன்னு சொன்னாரு. அவங்களே என்னைத் தேடி வந்து இவ்ளோ தூரம் சொன்னதுக்கு அப்புறம் என்னால பண்ண முடியல.
இந்தப் படத்துக்கு அண்ணனே பண்ணட்டும்’னு சொல்லிட்டாரு. அதுக்கு அப்புறம் இளையராஜா ஒத்துக்கல. முதல்ல ‘அமர்கிட்ட தானே சொன்னே. நீ அங்கேயே போ’ன்னு சொல்லிட்டாரு. அப்புறம் சமாதானம் எல்லாம் பண்ணினதுக்கு அப்புறமா முந்தானை முடிச்சு படத்துக்கு இளையராஜா கமிட் ஆனாரு. இப்படி வாக்கு கொடுக்குறது முக்கியமல்ல. ஆனா அதை ஏதோ ஒரு சூழல் வந்து எங்கேயோ மாற்றிடுது.
அப்புறம் தான் டி.ஆர். சொன்னது எனக்குப் புரிஞ்சது. டி.ஆர்.எப்பவும் புன்னகை அரசன் தான். அவர் எப்போதும் பார்த்து நிதானமா பண்ணுன்னு தான் சொல்வார். அந்த அளவு அவருக்கிட்ட அந்த 2 விஷயமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.