தமிழ் சினிமாவில் மிக ஸ்டைலிஷ் திரைப்படங்கள் எடுப்பதில் சிறந்த இயக்குனர் தான் விஷ்ணுவர்தன். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான குறும்பு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், அதன் பின்னர் அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம், சர்வம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இவரது இயக்கத்தில் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஷேர்ஷா என்ற இந்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் தேசிய விருதுகளையும் பெற்றுக் கொடுத்திருந்தது. மேலும் தனது இயக்கப் பயணத்தில் நடிகர் அஜித்தை இரண்டு முறை இயக்கிய பாக்கியமும் விஷ்ணுவர்தனுக்கு கிடைத்திருந்தது.
ரஜினி, ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலரும் நடித்து மிகப்பெரிய ஹிட்டான பில்லா படத்தை தமிழில் மீண்டும் ஒருமுறை அஜித்குமாரை வைத்து ரீமேக் செய்திருந்தார் விஷ்ணுவர்தன். தமிழ் சினிமாவில் இன்று ஏராளமான ஸ்டைலிஷ்ஷான திரைப்படங்கள் வருவதற்கு வித்திட்ட இந்த பில்லா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல் விஷ்ணுவர்தனை முன்னணி இயக்குனராகவும் நிலை நிறுத்தி இருந்தது.
மீண்டும் அஜித்துடன் ஆரம்பம் என்ற திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றி இருந்தார் விஷ்ணுவர்தன். அதேபோல அவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வந்துள்ளார். அதில் பில்லா படத்தில் வரும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்துமே இன்றளவிலும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இருந்து வரும் நிலையில் தான், மை நேம் இஸ் பில்லா பாடலின் பின்னணியை ஒரு நேர்காணலில் விஷ்ணுவர்தன்பகிர்ந்துள்ளார்.
“மை நேம் இஸ் பில்லா என்ற பாடலுக்காக நாங்கள் செட் பணிகள் அனைத்தையும் ஷூட்டிங்கிற்காக முடித்து தயாராகி விட்டோம். ஆனால் ஷூட்டிங் நாள் வரை யுவன் சங்கர் ராஜா பாடலை தரவே இல்லை. தம்பி யுவன் அப்போது மிக பிசியாக இருந்தார். பழைய பாடல் தான் என்பதால் சீக்கிரம் கொடுத்து விடு என கேட்டுக் கொண்டே இருந்தேன். தந்து விடலாம் என யுவன் கூறியும் ஷூட்டிங் நாளே நெருங்கிய பின்னரும் பாடல் வரவில்லை.
ஷூட்டிங் நாளில் கேட்ட போதும் பாடல் வந்து விடும் என்று தான் யுவன் தெரிவித்தார். செட் போட்டும் பாடல் வரவில்லை என்பதை தயாரிப்பாளரிடம் கூற முடியாது. இதனால், எனக்கு பிடித்த வகையில் பாடலே இல்லாமல் நான் காட்சிகளை எடுக்க தொடங்கி விட்டேன்” என விஷ்ணுவர்தன் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.