100 ரூபாயில் ஊட்டியை சுற்றிப் பார்க்கலாம்… எப்படி தெரியுமா…?

By Meena

Published:

கோடை விடுமுறை என்றாலே மக்கள் சுற்றுலா செல்ல கிளம்பிவிடுவர். அதிலும் பெரும்பாலான மக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய இரண்டிற்கும் தான் சுற்றுலா செல்வார்கள். அவை இரண்டும் மலை பிரதேசம் என்பதால் கோடையின் வெப்பத்தை தணிக்க அங்கு மக்கள் செல்வது வழக்கம்.

நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஊட்டி ஒரு அழகான சுற்றுலா மலை வாசஸ்தலம் ஆகும். இயற்கை அன்னையின் புன்னகை பூக்கும் யூகலிப்டஸ் மற்றும் பைன் மரங்கள், காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள் கொண்ட அதன் அழகிய நிலப்பரப்புகளுடன் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது.

ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏராளமான சுற்றுலா அம்சங்கள் உள்ளன. படகு சவாரி மற்றும் மலையேற்ற வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இது தவிர ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, தேயிலை தோட்டம், அருங்காட்சியகம் மற்றும் தொழிற்சாலை, ஊட்டி ஏரி போன்றவை பார்க்க வேண்டிய இடங்களாகும்.

இந்த இடங்களை பொதுவாக மக்கள் காரில் சென்று ஒவ்வொரு இடங்களுக்கு சென்று பார்வையிடுவர்கள். இது அதிக செலவாக இருக்கலாம். குறைந்த பட்ஜெட்டில் ஊட்டியை இப்போது சுற்றிப்பார்க்க நீலகிரி போக்குவரத்து கழகம் சுற்றுலா பயணிகளுக்காக புது திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்காக பல சுற்றுப் பேருந்துகளை போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கி, தண்டர்வோர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பெஞ்ச் மார்க் டீ மியூசியம், ரோஜா பூங்கா ஆகிய இடங்களுக்குச் செல்கிறது.

இந்த சுற்றுப் பேருந்துகளில் ஏதாவது ஒன்றில் ஏறி, 100 ருபாய் கொடுத்து நீங்கள் பயண அட்டையை வாங்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் செல்லும் தேதியை அதில் டிக் செய்து கையொப்பமிட்டு தருவார்கள். அந்த டிக்கெட்டை பயன்படுத்தி அந்த நாள் முழுவதும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு பேருந்தில் பயணம் செய்யலாம். சிறுவர்களுக்கு 50 ருபாய் பயண அட்டை, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்.

ஒவ்வொரு இடத்திலும் சுற்றுலா செல்பவர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடலாம். பிறகு அங்கிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல, சுற்றுப் பேருந்துகளில் ஏறி ஏற்கனவே எடுத்த பயண அட்டையை காண்பித்தால் மட்டும் போதும். இந்த பயண அட்டை ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும். அதற்கு ஏற்றபடி பயணிகள் திட்டமிட்டு எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம்.

கடந்த ஏப்ரல் நடுவில் தொடங்கப்பட்ட இந்த சலுகை வருகிற ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 100 ருபாய் பயண அட்டை குறைந்த பட்ஜெட்டில் ஊட்டியை சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.