கோலி, ருத்து வரிசையில் கே எல் ராகுல் செஞ்ச மோசமான சாதனை.. அதிரடி சீசன்லயும் இப்படி ஒரு சோதனையா..

By Ajith V

Published:

ஐபிஎல் 2024 நிச்சயம் சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களை மட்டுமே விரும்பி பொழுதுபோக்கு கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு விருந்து என்றே தைரியமாக சொல்லலாம். அதே வேளையில், கிரிக்கெட்டின் தன்மையை இந்த அதிரடி ஆட்டங்கள் குலைத்து வருவதாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அதிரடியை விரும்பி பார்க்கும் ரசிகர்களை எந்த விதத்திலும் அவை தொந்தரவு செய்யவில்லை என்பது தான் உண்மை.

இந்த சீசனில் ஷிவம் துபே, டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், சுனில் நரைன், பிலிப் சால்ட், ஜேக் ஃப்ரேஷர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், வில் ஜேக்ஸ், சஷாங்க் சிங், அசுதோஷ் ஷர்மா உள்ளிட்ட பல வீரர்களின் அதிரடி ஆட்டம், நிச்சயமாக சிறப்பம்சமான விஷயங்கள் என தைரியமாக சொல்லி விடலாம்.

ஆனால் அதே வேளையில் இதற்கு நேர்மாறாக கூட இந்த ஐபிஎல் சீசனில் பல்வேறு சம்பவங்கள் பேட்ஸ்மேன்களால் நடைபெற்று தான் வருகிறது. இந்த சீசனில் ரன் குவிப்பில் முதல் இடத்தில் இருந்து வரும் விராட் கோலி, 11 போட்டிகள் ஆடி இருந்த நிலையில் 550 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். மேலும் இவருக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்துராஜ் 11 போட்டிகளில் 541 எடுத்து இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தார்.

ஆனால் இந்த இரண்டு பேரும் அதிக ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் இவர்களது ஸ்ட்ரைக் ரேட் மிக குறைவாக தான் இருந்து வருகிறது. ஏறக்குறைய கோலி மற்றும் ருத்துராஜ் என இருவருமே 150 ஸ்ட்ரைக் ரேட்டிற்கு கீழே தான் ஆடி வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் ஹெட், சஞ்சு சாம்சன், சுனில் நரைன் என அனைவருமே குறைந்தபட்சம் 160 முதல் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தற்போது அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் கே எல் ராகுல், 12 போட்டிகளில் ஆடி 460 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் இவரது ஸ்ட்ரைக் தற்போது 136 ஆக தான் உள்ளது. அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இருக்கும் மற்ற வீரர்களை விட குறைந்த சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களை அடித்துள்ள கே எல் ராகுல், ஹைதராபாத் அணிக்கு எதிராக 33 பந்துகளில் 29 ரன்கள் அடித்திருந்த போது அதிக விமர்சனத்தையும் சந்தித்திருந்தார்.

இந்த நிலையில் தான் விராட் கோலி மற்றும் ருத்துராஜ் ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த சீசனில் மோசமான ஒரு சாதனை பட்டியலிலும் மூன்றாவது இடத்தில் இணைந்துள்ளார் ராகுல். இந்த சீசனில் விராட் கோலி ஏறக்குறைய 120 பந்துகளுக்கு மேல் டாட் பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ருத்துராஜ், 110 டாட் பந்துகளையும் பிடித்திருந்த நிலையில் தான் தற்போது மூன்றாவது வீரராக கே எல் ராகுல் 103 டாட் பந்துகளை இந்த சீசனில் சந்தித்துள்ளார்.

இந்த அதிரடி சீசனிலும் பல முன்னணி வீரர்கள் அதிக டாட் பந்துகளை எதிர்கொண்டு பவுண்டரிகளை குறைவாக அடித்து வரும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.